பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தனிக்‌ கல்விப்‌ பயிற்சி

71

எவ்வளவு கற்பிக்கலாமோ அவ்வளவு நான் உனக்குக் கற்பித்துவிட்டேன். இனி நீயே படித்துக் கல்வியைப் பூரணம் செய்யவேண்டும். ஆசானுடைய போதகம் முடிந்தவுடனே கல்வியும் முடிந்து போனதாகச் சிலர் நினைக்கிறார்கள். அப்படி எண்ணுவது தப்பு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பாடசாலையை விட்ட பிற்பாடு தான் படிப்பு ஆரம்பிக்கிறது. யுபள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாதுரு என்பதுபோல் பள்ளிக்கூடத்தில் படிக்கிற படிப்பை அபிவிருத்தி செய்யாவிட்டால், அந்தப் படிப்பு ஒன்றுக்கும் உதவாது.

பாடசாலையிலே படிக்கிற படிப்பு அஸ்திவாரமாகவும், பாடசாலையை விட்ட பிற்பாடு, தானே படிக்கிற படிப்பு மேற்கட்டத்துக்குச் சமானமாயு மிருக்கின்றது. ஒரு ஊருக்குப் போகிற மார்க்கத்தை மட்டும் உபாத்தியாயர் போதிப்பதே அல்லாது கல்வியையே பூரணமாய்க் கற்பிப்பது சாத்தியமல்ல. உபாத்தியாயர் காட்டிய வழியைப் பிடித்துக் கொண்டு, அகோராத்திரம் படித்துக் கல்வியைப் பூர்த்தி செய்வது மாணாக்கனுக்குக் கடன். வித்தையை அபிவிர்த்தி செய்யாமல் பாடசாலைப் படிப்பே போதுமென்று இருக்கிறவன், மாளிகை கட்டாமல் அஸ்திவாரமே போதுமென்று இருக்கிறவனுக்குச் சமானமாகிறான். பூட்டிவைத்திருக்கிற பொக்கிஷத்திற்குத் திறவுகோல் கொடுப்பது போல, எந்தப் புஸ்தகத்தை வாசித்தாலும், அர்த்தம் தெரிந்துகொள்ளும்படியான ஞானத்தை உனக்குப் போதித்து, வித்தியா பொக்கிஷத்தின் திறவுகோலை உன் கையிலே கொடுத்துவிட்டேன். இனி மேல் நீ உன்னுடைய முயற்சியால் அந்தப் பொக்கிஷத்தைத் திறந்து அனுபவிக்கவேண்டுமே அல்லாது, நான் செய்யத்தக்கது ஒன்றுமில்லை. அரும்பதங்களுக்கு அர்த்தம் தெரியவேண்டுமானால், அகராதி, நிகண்டு முத்டலிய வியாக்கியான நூல்களும் இருக்கின்றன. திருவள்ளுவர், கம்பர் முதலிய மகாவித்துவான்கள், தங்களுடைய முயற்சியால் கவி சிரேஷ்டர்கள்