பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

ஆனார்களே தவிர, அவர்களுடைய உபாத்தியாயரிடத்தில் அவர்கள் கற்றுக்கொண்டது அற்பமாகவேயிருக்கும். அந்த வித்வான்களெல்லாம் மனுஷப் பிறப்பே அல்லாமல் தெய்வீகம் அல்லவே. அவர்களைப் போல நீயும் பிரயாசப்பட்டுக் கல்வி பயின்றால், அவர்களுக்குச் சமானம் ஆவதற்கு ஆடங்கம் என்ன?

““கல்வியின் பிரயோஜனம் எல்லாங்கூடிக் கடவுளை அறிவதுதான். சகல சாஸ்திரங்களும், வேதங்களும், வேதாகமங்களும், சமயகோடிகளும் சொல்லுவதெல்லாம், கடவுளே அல்லாமல் வேறல்ல. கல்விமானுக்குத் தெய்வ பக்தியே சிறந்த பூஷணமாயிருக்கின்றது. ஒருவன் கல்விமானாயிருந்தாலும், தனவானாயிருந்தாலும், அவனிடத்தில் தெய்வநேசம் இல்லாவிட்டால் அவனைப் போல் நிர்ப்பாக்கியர்கள் ஒருவருமில்லை. ஒவ்வொரு நிமிஷமும் கடவுளிடத்தில் நாம் உண்பது அவருடைய அன்னம்; உடுப்பது அவருடைய வஸ்திரம்; குடிப்பது அவருடைய ஜலம்; நாம் வசிப்பது அவருடைய வீடு; சஞ்சரிப்பது அவருடைய பூமி; நாம் சுவாசிப்பது அவருடைய சுவாசம்; நாம் காண்பது அவருடைய பிரகாசம்; நாம் அனுபவிக்கிற நமது தேகமும் பஞ்சேந்திரியங்களும் ஆத்துமாவும் அவருடைய கொடை. அவருடைய கிருபை இல்லாவிட்டால், ஒரு நிமிஷம் நாம் சீவிக்கக் கூடுமா? அவர் நம்மை அசைக்காமல் நாம் அசையக்கூடுமா? அவர் நம்மை நடப்பிக்காவிட்டால் நாம் நடக்கக் கூடுமா? பூமியைப் பார்த்தாலும் ஆகாயத்தைப் பார்த்தாலும் எங்கே பார்த்தாலும் அவருடைய உபகாரமயமே அன்றி வேறுண்டா? ஆகாயம் நம்மைச் சூழ்ந்திருப்பது போல் அவருடைய உபகரணங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. சமுத்திரத்திலே பிறந்து, சமுத்திரத்திலே வளர்ந்து, சமுத்திரத்திலே சீவிக்கிற மீன்களைப் போல,