பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசனுக்கும்‌ கடவுளுக்கும்‌ வேறுபாடு

73

கடவுளது கிருபாசமுத்திரத்துக்குள்ளாகவே நாம் ஜனித்து, வளர்ந்து, சீவிக்கிறோம்.

““அரசனுடைய ஊழியத்திற்கும் தெய்வ ஊழியத்திற்கும் இருக்கிற பேதத்தைப் பார். அரசனுக்கு நாம் நின்று சேவிக்கவேண்டும். கடவுளைத் தியானிக்க நிற்கவேண்டுவதில்லை. நாம் பசியாயிருக்க, அரசன் உண்ணுகிறான். கடவுள் தாம் உண்ணாமல் நம்மை உண்பிக்கிறார். அரசன் தூங்கும்போது நாம் தூங்காமல் அவனைக் காக்கவேண்டும். கடவுள் தாம் தூங்காமல் நம்மைத் தூங்கவைத்துக் காவலாயிருக்கிறார். அரசன் ஓயாமல் நம்மிடத்தில் வேலை கொள்ளுகிறான். கடவுள் நம்மிடத்தில் ஒருவேலையும் வாங்காமல், அவரே சகல வேலைகளையுஞ் செய்கிறார். அரசன் நம்மிடத்தில் வரி யாசகம் செய்கிறான். கடவுள் நம்முடைய அன்பைத் தவிர வேறொன்றும் அபேக்ஷிக்கவில்லை. அரசன் அற்பக் குற்றத்தையும் க்ஷமியான். கடவுள் நாம் தினந்தோறுஞ் செய்கிற எண்ணிறந்த குற்றங்களையும் பொறுத்துக் கொண்டு சாகிற வரையில் நம்மைத் தண்டியாமல் சகல உபகாரங்களுஞ் செய்து வருகிறார்.

அரசன் சுயபுத்தி இல்லாதவன் என்பதற்கு அவனுடைய மந்திரிகளே சாக்ஷி. அவன் சுயசூரன் அல்ல என்பதற்கு, அவனுடைய படைகளே சாக்ஷி. அவன் யாசகஸ்தன் என்பதற்கு, அவன் வாங்கும் குடி இறையே சாக்ஷி. அவன் நியாய பரிபாலனம் செய்யத் தெரியாதவன் என்பதற்கு அவனால் நியமிக்கப் பட்ட நியாயாதிபதிகளே சாக்ஷி. இப்படிப்பட்ட குறைவுகளில்லாமல், சர்வக்ஞத்துவமும் சர்வ சக்தியும் சர்வ சாம்பிராச்சியமும் உடைய கடவுளை, எப்போதும் தியானிக்க வேண்டும். அவரைத் தியானிப்பது நமக்கே ஆத்மானந்தமாகவும், அவரைப் புகழ்வது வாய்க்கு மாதுரியமாகவும் அவருடைய நாமத்தைக் கேட்பது காதுக்கு இனிமையாயுமிருக்கின்றது”