பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்ற விசாரணை

111

உத்தியோகஸ்தர் அதிக கோபத்துடன், பிரதாப முதலியென்பவன் யாரென்று கேட்க, நான் தானென்று அவருக்கு எதிரே போனேன். என்னைப் பிடித்துக் கட்டும்படி உத்தரவு கொடுத்தார். உடனே என் தகப்பனாரும், சம்பந்த முதலியாரும் ஓடி வந்து “அந்தப் பிள்ளையைக் கட்ட வேண்டிய காரணம் என்ன? அவன் என்ன குற்றம் செய்தான்?” என்று கேட்டார்கள். உடனே எங்கள் பந்துக்கள், வேலைக்காரர்கள், அந்தக் கிராமத்துக் குடிகள் முதலான இருநூறு ஜனங்கள் கூட்டங் கூடினதை அந்த உத்தியோகஸ்தர் கண்டு பயந்து, என்னைக் கட்ட வேண்டாமென்று உத்திரவு கொடுத்து, தெருத் திண்ணைமேல் உட்கார்ந்துகொண்டு, என்னைப் பார்த்து “ஒரு பெரிய உத்தியோகஸ்தனாகிய தாசில்தாரை நிஷ்காரணமாய் நீர் கொலை செய்துவிட்டதால், அதைப் பற்றி விசாரிக்க வந்திருக்கிறோம். நீர் என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார். இதைக் கேட்ட உடனே எனக்குத் தைரியம் உண்டாகி, ஞானாம்பாள் விஷயத்தில், அந்த தாசில்தார் செய்த அக்கிரமங்களை எல்லாம் ஆதியோடந்தமாகத் தெரிவித்தேன். உடனே அவர் “நீர் சொல்வதற்குச் சாட்சிகள் உண்டா?” என்று வினவினார். சாட்சிகள் இருக்கிறார்களென்று சொல்லி, நான் பிடித்து வைத்திருந்த இரண்டு சேவகர்களையும் அவர் முன்னே கொண்டுவந்து விட்டேன். அவர்கள் ஒரு காரியத்தையும் மறைக்காமல், சகல சங்கதிகளையும் விவரமாய்ச் சொல்லி வாக்குமூலம் எழுதி வைத்தார்கள். பிற்பாடு ஞானாம்பாளைத் திரைமறைவில் இருக்கச் சொல்லி அவளையும் அவளுடன் கூட வந்த ஆண்டிச்சி அம்மாளையும் விசாரித்தார். கடைசியாய் அவர் உண்மையைத் தெரிந்துகொண்டு, என்னை நோக்கிச் சொல்லுகிறார்; “தாசில்தாரையும் அவருடைய நேசனையும், நீர் நிர்நிமித்தியமாய்க் கொலை செய்ததாக மட்டும் பிரஸ்தாபமே தவிரத் தாசில்தார் செய்த அக்கிரமங்களை ஒருவரும் தெரிவிக்கவில்லை. இப்போதுதான், உண்மை வெளியா-