பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாயூரம் நீதிபதி வேதநாயகரின்
வாழ்க்கை வரலாறு

எழுதியவர்: ஆ. பி. அந்தோணி இராசு, எம்.ஏ.,

முன்னோர்:

சோற்று வளமுடைய சோழ நாட்டிலே, திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே 16 கி.மீ. தொலைவில் ‘வேளாண் குளத்தூர்’ என்றோர் ஊர் உண்டு. அஃது இக்காலத்தில் குளத்தூர் என்று குறுகி வழங்குகிறது. அவ்வூரில் மதுரநாயகம் பிள்ளை என்பவர் பெரிய பண்ணையாராக இருந்தார். அவருக்கு 50 வயது நடந்தபோது தீராத சூலைநோய் ஒன்று ஏற்பட்டது. நாட்டு மருத்துவமும், கோயில் வழிபாடுகளும் குறையைத் தீர்க்கவில்லை. அவர் ஆவூருக்குச் சென்று, அங்கிருந்து மேலை நாட்டுக் கத்தோலிக்க குருக்களிடம் தனது குறையைக் கூறினார். அவர்கள் மருந்தளித்ததோடு இயேசுவை மன்றாடினால் நோய் நீங்கும் என்று உரைத்தனர். அவரும் இயேசுவை மன்றாடி மருந்துண்டார். தனது நோய் நீங்கப் பெற்றார். அதனால் அவரும் அவரது குடும்பத்தாரும், சைவ சமயத்தை விட்டுக் கத்தோலிக்க சமயத்தைத் தழுவினர்.

பிறப்பு:

அந்த மதுரநாயகத்தின் மடியிலே உதித்த சவரிமுத்துப் பிள்ளை என்பவருக்கும், ஆரோக்கியமரி என்பவருக்கும் மகனாக, 1826ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14ஆம் நாள்

உதித்தவரே நம் வேதநாயகர். பெற்றோராலும் மற்றேராலும் சீராட்டியும் பாராட்டியும் வளர்க்கப்பெற்ற வேதநாயகர், பள்ளிப் பருவம் எய்தியதும் தமது ஊரில் இருந்த திண்ணைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அருமைத் தமிழையும் நெடுங் கணக்கையும் ஐயந் திரிபின்றிக் கற்றுத் தேர்ந்தார்.