பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

ஆங்கிலக் கல்வி :

ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய அக்காலத்தில் “அரைக் காசு வேலையானாலும், அரசாங்க வேலையாகுமா?” என்ற கொள்கையே எங்கும் நிலவியது. ஆதவால், தன் மகன் ஆங்கிலம் சுற்று அரசாங்க வேலை பார்க்க வேண்டும் என்று வேதநாயகரின் தந்தை விரும்பியதில் வியப்பில்லை. இக்காலம் போல் ஆங்கிலம்கற்பிக்கும் பள்ளிகள் ஊர்தோறும் இல்லாத காலம் அது. திருச்சிராப்பள்ளி போன்ற பெருநகரங்களில் கூட இரண்டொரு பள்ளிகளே இருந்தன. அரசாங்கத்தில் வேலை பார்த்த சிலர் மாணவர்களுக்குத் தம் வீட்டில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் வழக்கமும் இருந்தது.

திருச்சிராப்பள்ளியில் இருந்த தென் மாநில வழக்கு மன்றத்தில் (Southern Provinceal Gourt) தியாகப் பிள்ளை என்பவர் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்தார். அவர் ஆங்கிலமும் அருந்தமிழும் நன்கு கற்றவர். சவரிமுத்துப் பிள்ளை, தக்கார் சிலரின் பரிந்துரையுடன் தியாகப்பிள்ளையை அணுகித் தன் மகனுக்கு ஆங்கிலம் கற்றுத் தருமாறு வேண்டினார். வேதநாயகரின் அறிவுத்திறன் அவரது முகத்தில் தோன்றவே, தியாகப் பிள்ளை அவரைத் தன் மாணவனாக ஏற்றுக் கொள்ள இசைந்தார்.

வேதநாயகர் அவர் வீட்டிலேயே தங்கியிருந்து, ஒரு குல முறைப்படி ஆங்கிலமும் அன்னைத் தமிழும் கற்கலானார். ஆங்கிலத்தில் அருமையாகப் பேசவும் எழுதவும் வல்லவர் தியாகப் பிள்ளை. அருந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியும் தேர்ச்சியும் உடையவர். அத்தகைய கூட்டுறவால் நம் வேதநாயகரும் இரு மொழி வல்லுநர் ஆனார். இளமையிலேயே தமிழ்க் கவிகள் இயற்றும் திறமையும் பெற்றார். தியாகப் பிள்ளையிடம் வடமொழியும் பிரெஞ்சும்கூட ஓரளவு கற்றுக் கொண்டார்.