பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

பிரதாப முதலியார் சரித்திரம்

ஞானாம்பாள் வேலை செய்கிற நேரம் போக மற்ற நேரங்களில் நானும் அவளும் பல விஷயங்களைப் பற்றிச் சம்பாஷிக்கிறது வழக்கம். ஒரு நாள் அழகைப் பற்றிப் பிரஸ்தாபம் வந்தபோது அவள் சொல்லுகிறாள்:— ““குண அழகும், புத்தியின் அழகும் அழகே யல்லாமல் முக அழகு அழகல்ல. ஒரு ஸ்திரீயினுடைய அழகையாவது, புருஷனுடைய அழகையாவது அழகென்று எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்களா? ஒருவனுடைய முகம் அழகென்று சிலர் ஒப்புக்கொண்டாலும் அநேகர் அதை விகாரமென்று சொல்லுகிறார்கள். ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பதுபோல் அவரவர்களுடைய பிரியத்துக்குத் தகுந்தபடி அவலக்ஷணத்தையும் லக்ஷணமென்று சொல்லுகிறார்கள். குணத்தையும் புத்தியையும் சிலாகிக்காதவர்கள் யார்? ஒருவன் குணவானாயும் கல்விமானாயும் இருப்பானானால் அவனால் உலகத்துக்கு எவ்வளவோ பிரயோஜனமுண்டு. அழகினால் யாருக்கு என்ன பிரயோஜனம்? யௌவன காலத்தில் அழகுக்கு விசேஷமே தவிர வயது செல்லச் செல்ல அழகும் குறைந்துபோகின்றது. மேலும் அம்மை முதலிய பல வியாதிகளால் அழகு விகாரமாய் மாறிவிடுகின்றது. குணமும், விவேகமும் எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் மாறாமல் ஒரே தன்மையாயிருக்கின்றது. அழகில்லாத ஆடுமாடுகள் உலகத்துக்கு உபகாரியாயிருக்கின்றன. காஞ்சிரங்கனி அழகாயிருந்து காரியமென்ன? அழகை மின்னலுக்குச் சமானமாக வித்வான்கள் வர்ணிக்கிறார்கள். மின்னல் இடியை உண்டுபண்ணுவதுபோல் அழகும் காமவிகாரம் முதலான பல தீமைகளை விளைவிக்கின்றது”” என்று பிரசங்கித்தாள்.

என் தாயாரையும் ஞானாம்பாளையும் அவளுடைய தாயாரையும் தவிர வேறே ஸ்திரீகளை நான் அறியாதபடியால் ஸ்திரீக ளெல்லாரும் நல்லவர்க ளென்று பூசிக்கிற-