பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தையர்கள்‌ மன வருத்தம்‌

143

அவர்களைக் கண்டவுடனே “அம்மா! நடந்த சங்கதிகளை எல்லாம் கேள்விப்பட்டீர்களா?” என்று சொல்லி அழுதேன். அவர்களும் சற்று நேரம் என்னுடன்கூட விசனப்பட்ட பிற்பாடு என் கண்ணீரைத் துடைத்துச் சொல்லுகிறார்கள்: “அப்பா! நீ கிலேசப்பட வேண்டாம்; பெரியவர்களா யிருக்கிறவர்களுக்கு ஒவ்வொரு சமயத்திலும் கோபம் வருகிறதும் பிற்பாடு தணிகிறதும் வழக்கம் தான். இப்போது உன் தந்தையார் ஏதோ சொன்னார்களென்று துக்கிக்க வேண்டாம். நீ பிறந்தது முதல் இந்நாள் மட்டும் உன்னை உயிருக்கு உயிராய் வளர்த்தவர்கள் இப்போது கோபமாய் ஒரு வார்த்தை சொன்னால் அதற்காக மனஸ்தாபப் படலாமா? அதற்குமுன் அவர்கள் செய்த நன்மையை மறந்து விடலாமா? அவர்கள் கோபத்திலே சொன்ன வார்த்தைகளை யெல்லாம் நிசமென்று நீ மனம் வருந்தாதே. ஞானாம்பாளை நீ சீக்கிரத்தில் பார்ப்பாய்” என்று பலவிதமாக என் தாயார் எனக்குத் திடஞ்சொன்னார்கள். அவர்கள் என் கூட இருந்த வரையில் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாகவிருந்தது. அவர்கள் போனவுடனே அந்த ஆறுதலும் போய்விட்டது. என்னுடைய வியாகுலத்தை அதிகப்படுத்துவதற்கு இன்னொரு காரணமும் கூடச் சேர்ந்தது. அஃது என்னவென்றால் சம்பந்தி முதலியாருக்கும் என் தகப்பனாருக்கும் உண்டான சண்டை நிமித்தம் ஞானாம்பாளுக்கு வியாதி அதிகரித்து, அவளுடைய கர்ப்பமும் அழிந்து போனதாக நான் கேள்விப்பட்டு, வேல் தொளைத்த புண்ணிலே கொள்ளிக் கட்டையைச் சொருகினது போல் பெருந்துயரத்தை அடைந்தேன். அந்தச் சண்டைக்குக் காரணமாயிருந்த கர்ப்பம் அழிந்துபோயும் அதனால் விளைந்த கலகம் தீரவில்லை. குதிரை தூக்கிப் போட்டதுமில்லாமல் மேலே ஏறியும் மிதித்ததுபோல், என் தகப்பனார் மறுபடியுஞ் சும்மா இராமல் எனக்கு வேறே பெண் விசாரித்துக் கலியாணம் செய்விக்கவேண்டுமென்று எண்ணங் கொண்டதாக நான் கேள்விப்பட்டு இப்படிப்-