பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

பிரதாப முதலியார் சரித்திரம்

இந்தச் செய்திகளெல்லாம் என் தகப்பனார் கேள்விப்பட்டு அவர் என்னை அழைத்து “உனக்குத் தகப்பன் வேண்டுமா? பெண்சாதி வேண்டுமா?” என, நான் “இருவரும் தான் வேண்டும்” என்றேன். அவர் “அது கூடாது; நான் வேண்டுமானால் உன் பாரியைத் தள்ளி விட வேண்டும்” என்றார். நான் என் தகப்பனாரைப் பார்த்து “பிதுர் வாக்கியம் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் ஒத்திருக்கிற பக்ஷத்தில் நான் அந்தப்படி நடக்கவேண்டியது தான். சகல சாஸ்திரங்களுக்கும், வேத வாக்கியங்களுக்கும் விரோதமாகவும் நிஷ்காரணமாகவும் என் பாரியைத் தள்ளிவிடும்படி சொல்கிறீர்கள். அந்த உத்தரவை நான் எப்படி அனுஷ்டிக்கக் கூடும்?” என்றேன். உடனே அவருக்குக் காலாக்கினி போல் கடுங் கோபமுண்டாகி “அடா! பயலே! இதற்குத் தானா உன்னை நான் பெற்றேன்? வளர்த்தேன்? நேற்று வந்தவளைப் பொருளாயெண்ணி என்னை அலக்ஷியஞ் செய்தாயே! இனி மேல் அவளும் இங்கே வரக் கூடாது. நீயும் அங்கே போகக் கூடாது. இனி நீ அவளிடத்தில் பேசினால் எனக்கு நீ பிள்ளையுமல்ல; நான் உனக்குத் தகப்பனுமல்ல; என்னுடைய ஆஸ்தியும் உனக்கு நாஸ்தி தான்” என்றார். இதைக் கேட்டவுடனே எனக்கு எவ்வளவு துயர முண்டாயிருக்குமென்பதை இதை வாசிக்கிறவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமே யல்லாது அதை விவரிக்க நான் சக்தியுள்ளவனல்ல. இப்படிப்பட்ட வார்த்தைகளை இதற்குமுன் ஒரு நாளும் நான் கேட்டதில்லையாதனால் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் பாணம் போல் என் இருதயத்தைப் பிளந்தது. சம்பந்தி முதலியார் வீட்டுக்கு நானும் போகக் கூடாது. என் வீட்டுக்கு ஞானாம்பாளும் வரக்கூடாதென்று சம்பந்தி முதலியாரும் என் தகப்பனாரும் ஆணையிட்டு மறித்தபிற்பாடு இனி மேல் அவளை எப்போது காணப்போகிறோம் என்று நான் துக்காக்கிரனாயிருக்கும் போது என் தாயார் பரிதாப முகத்துடன் என்னிடம் வந்தார்கள்.