பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறவாக்‌ குழந்தை சுவீகாரம்‌

145

எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் பிள்ளையை எனக்கு நீர் ஸ்வீகாரம் கொடுக்கவேண்டும்; அதற்கென்ன சொல்லுகிறீர்?” என்றார். என் தகப்பனார் சிரித்துக்கொண்டு “கர்ப்பமே நிச்சயமென்று தெரியவில்லை; அது நிச்சயமாயிருந்தாலும் ஆண் பிள்ளைதான் பிறக்குமென்று எப்படி நிச்சயிக்கக் கூடும்? பின்னும் ஜேஷ்டபுத்திர ஸ்வீகாரமும் புத்திரிகா புத்திரி ஸ்வீகாரமும் செல்லாதென்று தர்மசாஸ்திர வசனமும் இருக்கின்றதே” என்றார். சம்பந்தி முதலியார் என் தகப்பனாரைப் பார்த்து “உம்மை நான் தர்ம சாஸ்திரம் கேட்கவில்லை. நீர் அந்தப் பிள்ளையை ஸ்வீகாரம் கொடுப்பீரா? மாட்டீரா? இரண்டிலொன்று சொல்லும்” என்றார். உடனே என் தகப்பனார் “எனக்குப் பௌத்திரன் வேண்டாமா? உமக்கெப்படி ஸ்வீகாரம் கொடுப்பேன்?” என்றார். இதைக் கேட்டவுடனே சம்பந்தி முதலியாருக்கு ஆக்கிரம் உண்டாகி, அவர் வீட்டுக்குப் போய் “ஞானாம்பாளைக் கூப்பிட்டு “உனக்கு நான் வேண்டுமா? புருஷன் வேண்டுமா?” என்று கேட்க, அவள் “இருவரும் தான் வேண்டும்” என்றாளாம். “இருவரிலும் யார் விசேஷம்?” என்று அவர் மறுபடியும் கேட்க அவள் புருஷன் தான் விசேஷமென்று நேரே உத்தரவு சொன்னால் தகப்பனாருக்குக் கோபம் வருமென்று நினைத்து “என் தாயாருக்குத் தன் தகப்பனாரைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷமல்லவா?” என்று வினயமாகவும் மறை பொருளாகவும் மறுமொழி சொன்னாள். அதற்குச் சற்று நேரம் அவருக்குப் பயன் தெரியாமலிருந்து பிற்பாடு தெரிந்துகொண்டு ஞானாம்பாளை வாயில் வந்தபடி தூஷித்து “இனி மேல் நீ உன் புருஷன் வீட்டுக்குப் போவதைப் பார்க்கலாம். அவனும் இங்கே வருவதைப் பார்க்கலாம்” என்று சொன்னாராம். தூஷணியான வார்த்தைகளை அவள் கேளாதவளானபடியால் உடனே நடுக்கலும் சுரமும் கண்டு கர்ப்பத்துக்கு அபாயம் வந்துவிட்டது.