பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பானள் வந்து சேர்‌தல்‌

147

ஞானாம்பாளைக் கண்டவுடனே சூரியனைக் கண்ட பனி போல என்னுடைய துக்கமெல்லாம் விலகிவிட்டது. ஆனால் அவள் வியாதிப்பட்டு மெலிந்திருந்தபடியால் ““இப்படிப்பட்ட பலவீன ஸ்திதியில் நீ யாத்திரை செய்யக் கூடுமா?”“ என்று கேட்டேன். அவள் தனக்குப் பூரண சௌக்கியமாய்விட்டதால் யாத்திரை செய்யலாமென்று சொன்னாள். நான் அவளைப் பார்த்து ““என்னை நீ கலியாணஞ் செய்த நிமித்தம் உன்னுடைய உற்றார் பெற்றோரையும் சகல சுகங்களையும் இழந்து வனாந்தரத்தில் சஞ்சரிக்கும்படி நேரிட்டதே!“” என்றேன். அவள் என்னைப் பார்த்து ““நான் சொல்லவேண்டியதை நீங்கள் சொல்லுகிறீர்கள்! என்னாலே தான் உங்களுக்கு இப்படிப்பட்ட கதி வாய்த்தது. பின்னும் நீங்கள் இல்லாத இடம் நாடாயிருந்தாலும் அது தான் காடு. உங்களுடன் கூடியிருக்கிற காடே எனக்கு நாடு“” என்று சீதை ராமருக்குச் சொன்னதுபோல் எனக்குச் சொன்னாள். அவள் மறுபடியும் என்னைப் பார்த்து, ““எனக்குத் தங்கை எப்போது வருவாள்?“” என்று கேட்டாள். அதற்கு நான் அர்த்தம் தெரியாமல் மயங்கினேன். அவள் சிரித்துக் கொண்டு ““என்னுடைய மாமா உங்களுக்கு வேறே பெண் தேடி விவாகம் செய்ய யோசித்திருப்பதாக நான் கேள்விப் பட்டேன்“” என்றாள். அதற்கு நான் ““என்னுடைய சிநேகிதன் ஒருவன் இரண்டு தாரம் கலியாணம் செய்து பட்ட பாடுகளை நினைக்கும்போது, எனக்குத் தலை நடுக்கமாயிருக்கின்றது. நான் சந்திர சூரியர் தெற்கு வடக்கானாலும் இரண்டு தாரம் கொள்ளச் சம்மதியேன்“” என்றேன். அவள் ““உங்களுடைய சிநேகிதர் என்ன பாடுகள் பட்டார்?“” என்று கேட்டாள். அதற்கு நான் சொன்னதாவது:—

இரண்டு தாரம் கொண்ட ஒருவன் என்னிடத்திலே பேசும்போது தூங்கித் தூங்கி விழுந்துகொண்டு பேசினான். “நான் ஏன் தூங்கி விழுகிறாய்?” என்று கேட்க, அவன் என்னைப் பார்த்து யுஎனக்கு இரா முழுவதும் தூக்-