பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்‌ தந்தையர்‌ செய்த நன்றி

163

காத்தார்கள். நாம் வியாதியாயிருக்கும்பொழுது அவர்கள் அன்னம் ஆகாரம் நித்திரையைத் துறந்துவிட்டார்கள். நம்முடைய வாந்தி மல ஜலாதி அசுத்தங்களையுஞ் சகித்தார்கள். நம்மைச் சௌக்கியத்தில் வைக்கும்பொருட்டு அவர்களுடைய சௌக்கியங்களைக் குறைத்துக் கொண்டார்கள். துக்கங்களை எல்லாம் அவர்கள் தாங்கிக்கொண்டு சுகங்களை நமக்குக் கொடுத்தார்கள்” என்று பலவாறாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் எங்களிடத்துக்கு வந்தார்கள். நாங்கள் தாய்தகப்பன்மார்கள் செய்த நன்மைகளைக் குறித்துச் சம்பாஷிக்கிறோ மென்பதை தேவராஜப்பிள்ளை தெரிந்துகொண்டு அவர் எங்களைப் பார்த்து “கொடுமையான தாய்தகப்பன்மார்களுக்குக் கூடச் சில நல்ல பிள்ளைகள் எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில சரித்திரங்களைச் சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று சொல்லுகிறார். “

சில காலத்துக்குமுன் தஞ்சை நகரத்திலே சுப்பையன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு புத்திரர்கள். அவர்களில் மூத்தவனுடைய ஜாதக பலன் தகப்பனுக்கு ஆகாது என்று ஜாதகத்தில் குறிக்கப்பட்டிருந்தபடியால் அவனைத் தகப்பன் சத்துரு பாவமாக எண்ணத் தலைப்பட்டான். அந்தப் பிள்ளையை அவன் கண்ணாற் பார்க்கிறதுமில்லை; கையால் தொடுகிறதுமில்லை. மூத்த பிள்ளை அவனுக்கு வேம்பாகவும், இளைய பிள்ளை கரும்பாகவும் போய்விட்டார்கள். மூத்த பிள்ளை நன்மை செய்தாலும் அது தகப்பனுக்குத் தீமையாகத் தோன்றும். இளைய பிள்ளை செய்கிற தீமையெல்லாம் நன்மையாகத் தோன்றும். மூத்த பிள்ளை இடத்தில் தகப்பனுக்கு உண்டாயிருக்கிற துவேஷத்தைப் பரிகரிக்கிறதற்கு அந்தப் பிள்ளையின் தாயார் அவளாற் கூடியமட்டும் பிரயாசைப்பட்டும் நிஷ்பிரயோசனமாய்ப் போய்விட்டது. ஆயினும் மாதா உள்ளவரைக்கும் மூத்த பிள்ளைக்குப் பத்தாம் வயதும், இளைய