பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162


26-ஆம் அதிகாரம்
தாய் தந்தையர் செய்த உபகாரம்—நல்ல
பிள்ளைகளின் சரித்திரம்

நாங்கள் வந்து சேர்ந்த மறு தினமே எங்களுடைய க்ஷேமலாபங்களைக் குறித்து தேவராஜப் பிள்ளை என் தகப்பனாருக்குத் திருமுகங்கள் அனுப்பினார். காலம் போகப்போக எங்கள் தாய் தந்தைகளை விட்டுப் பிரிந்த துக்கம் பெரிதாயிருந்தது. எங்கள் தந்தையர்களிடத்தில் எங்களுக்கு இருந்த அற்ப மனஸ்தாபமும் நாளாவட்டத்தில் தீர்ந்துபோய் விட்டது. ஒரு நாள் நானும் ஞானாம்பாளும் அடியிற் கண்டபடி சல்லாபித்துக் கொண்டோம்.

“தாய் தகப்பனைப்போல நமக்கு உபகாரிகள் யார் இருக்கிறார்கள்? மற்றவர்கள் எல்லாரும் ஏதாவது அற்ப உதவி செய்வார்கள். தாய் தகப்பன்மாரோவென்றால் தேகத்தையும் பிராணனையும் பூலோக வாழ்வையும் நமக்குக் கொடுத்த பரம தாதாக்களாயிருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் பெற்று வளர்த்து பெயரூட்டிப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டிச் சம்ரக்ஷித்தார்கள். மற்றவர்கள் எல்லாரும் யாதொரு பிரதி உபகாரத்தை விரும்பி உதவி செய்வார்கள். தாய் தந்தையர்கள் யாதொரு பிரதி பலனையும் வேண்டாமல் நம்முடைய சுகமே அவர்களுடைய சுகமாகவும் நம்முடைய துக்கமே அவர்களுடைய துக்கமாகவும் எண்ணி நாம் அழும்போதுகூட அழுதும் நாம் சந்தோஷிக்கும்போது கூடச் சந்தோஷித்தும் அத்தியந்த அன்பு பாராட்டினார்கள். நாம் வியாதியில்லாமலிருக்கும் பொருட்டு அவர்கள் மருந்துகளை உண்டு பத்தியம் பிடித்தார்கள். நாம் க்ஷேமமாயிருக்கும் பொருட்டுப் பல விரதங்களை அநுஷ்டித்து தேவதாப் பிரார்த்தனை செய்தார்கள். நாம் தூங்கும்போது அவர்கள் தூங்காமல் நம்மைப் பாது-