பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171


27-ஆம் அதிகாரம்
எதிர் பாரா நல்வரவு

ஒரு நாள் சாயரக்ஷை நானும் தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் வேடிக்கையாக உரையாடிக்கொண்டிருந்தோம். அப்பொழுது என்னுடன் சத்தியபுரியிலிருந்து வந்த வண்டிக்காரன் ஒருவன் வெளியே யிருந்து மேல்மூச்சு கீழ்மூச்சுடன் ஓடி வந்து உள்ளே நுழைந்து எங்களைப் பார்த்து “““சந்தோஷ சமாசாரம்! சந்தோஷ சமாசாரம்!““” என்று சொல்லிக்கொண்டு ஆநந்த நர்த்தனஞ் செய்தான். நாங்கள் “அந்த சமாசாரம் என்ன?” என்று கேட்க, அவன் “““சுவாமிகளே! நான் இரண்டு நாழிகை வழி தூரம் ஓடி வந்ததால் எனக்கு இரைக்கின்றது.! இரைப்பு அடங்கின உடனே சொல்லுகிறேன்““” என்று மறுபடியுங் குதித்துக் கூத்தாடினான். நான் அவனைப் பார்த்து “““இப்பொழுது நீ எத்தனையோ வார்த்தைகள் பேசினாய்! சந்தோஷச் செய்தி இன்னதென்று ஒரு வார்த்தையிலே சொல்லக் கூடாதா?”““ என்று உறுக்கினேன். அவன் மறுபடியும் காரியம் இன்னதென்று தெரிவிக்காமல் சம்பந்தமில்லாத காரியங்களைச் சொல்லி நேரம் போக்கினான். எனக்குக் கோபம் ஜனித்து அவனை அடிக்கிறதற்காகக் குதிரைச் சவுக்கைக் கையிலே எடுத்தேன். அவன் கத்திக் கொண்டு ““நான் சந்தோஷ சமாசாரங் கொண்டுவந்ததற்கு இது தானா சம்மானம்? நான் இன்று நேற்று வந்தவனல்லவா? நான் எத்தனையோ காலமாக உங்களுக்கு ஊழியஞ் செய்து வருகிறேன். பெரிய ஐயா, அம்மா கூட என்னை ஒரு வார்த்தை சொன்னதில்லை; ஒரு அடி அடித்ததில்லையே! நேற்றைப் பிள்ளையாகிய நீங்கள் என்னை அடிக்கலாமா? வையலாமா?”” என்று பல அசங்கதமான காரியங்களைப் பேசினானே தவிரச் சங்கதி இன்னதென்று தெரிவிக்கவில்லை. உடனே எனக்குக் கோபாக்கினி மூண்டு குதிரைச் சவுக்கை அவன் மேலே பிரயோகிக்க ஆரம்பித்தேன். அவன் இருபது அடி வாங்கின பிற்பாடு, எங்களை நோக்கி;