பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

பிரதாப முதலியார் சரித்திரம்

“சத்தியபுரியிலிருந்து ஐயா, அம்மா எல்லாரும் வருகிறார்கள். நான் ஆற்றுக்குப் போனபோது அவர்களை வழியிலே கண்டு சந்தோஷ சமாசாரஞ் சொல்வதற்காக இரண்டு நாழிகை வழி தூரம் குடல் தெறிக்க ஓடி வந்தேன்”” என்றான். இதைக் கேட்டவுடனே தேவராஜப் பிள்ளை பெருங் களிப்புடனே எழுந்து பெட்டியைத் திறந்து இரண்டு கோடி வஸ்திரங்களை எடுத்து சந்தோஷ சமாசாரங் கொண்டுவந்ததற்காக அந்த வண்டிக்காரனுக்கு வெகுமானஞ் செய்தார். அவன் அத்தனை அடிபட்டும் எங்களுக்குச் சங்கதியைப் பூரணமாய்த் தெரிவிக்கவில்லை. அவன் சொன்னதைக் கொண்டு என் தாய்தகப்பனார் மட்டும் வருவதாக எண்ணிக்கொண்டோமே தவிரச் சம்பந்தி முதலியாரும் அவருடைய பத்தினியும் வருவதாக ஊகிப்பதற்கு இடமில்லாமலிருந்தது. ஆனால் அவன் ஞானாம்பாள் இடத்திலே போய் அவளுடைய தாய் தந்தை வருவதாக மட்டுஞ் சொல்லி என் தாய் தந்தையருடைய வரவைப் பற்றி ஒன்றும் பிரஸ்தாபிக்காமலிருந்து விட்டான். நானும் ஞானாம்பாளும் சந்தித்தபோது தான் அவளுடைய தாய் தந்தைகள் வருவதாக எனக்கும் என்னுடைய தாய்தந்தைகள் வருவதாக ஞானாம்பாளுக்கும் வெளியாயிற்று. ஞானாம்பாள் என்னை நோக்கி “அந்த வண்டிக்காரனுடைய குதூகலிப்பையும் ஆனந்தத்தையும் யோசிக்குமிடத்தில் நம்முடைய தாய்தந்தையர் வரவையன்றி வேறு காரணமும் இருக்க வேண்டும். அதை இப்போது நான் அறிகிறேன்” என்று சொல்லி அந்த வண்டிக்காரனை அழைத்து அவனைப் பார்த்து “எல்லோரும் வருவதாகச் சொன்னாயே! அவர்களுடன் கூட உன் பெண்சாதியும் வருகிறாளா?” என்று கேட்டாள். அவன் “ஆம் அம்மா! ஆம் அம்மா!” என்று சொல்லி மறுபடியும் நடனஞ் செய்யத் தொடங்கினான். அவன் ஆனந்த நடனத்துக்கும் அவன் பாதிச் சமாசாரஞ் சொல்லிப் பாதியைச் சொல்லாமல் விட்டதற்கும் இப்போது தான் காரணம் தெரிந்தது.