பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெற்ரோரை வரவேற்றல்‌

173

அவன் வந்த உடனே காரியத்தைத் தெரிவித்திருப்பானால் நானும் தேவராஜப் பிள்ளை முதலானவர்களும் என் தாய் தந்தைமார்களை வழியிலே எதிர்கொண்டு அழைப்பதற்காகப் போயிருப்போம். அவன் காரியத்தைச் சொல்லாமல் கால விளம்பனஞ் செய்தபடியால் நாங்கள் எதிர்கொண்டுபோக அவகாசம் இல்லாமற் போய்விட்டது. பிறகு சற்று நேரத்திற்குள் அநேகம் வண்டிகள் பல்லக்குகள் முதலிய வாகனங்கள் வருகிற ஓசை ேட்டு நாங்கள் வெளியே ஓடினோம். என் தகப்பனாரும் சம்பந்த முதலியாரும் இரண்டு குதிரைகள் பூண்ட ரதத்தினின்று கீழே இறங்கினார்கள். உடனே தேவராஜப் பிள்ளை அஞ்சலியஸ்தராய் அவர்களிடஞ் சென்று கைலாகு கொடுத்து அழைத்துக்கொண்டு வந்து அவர்களைத் தக்க ஆசனங்களில் இருத்தி உபசரித்தார். அவருடைய பத்தினி முதலிய ஸ்திரீகள் என் தாயார் மாமியார் முதலியோர்களை எதிர்கொண்டு அழைத்து வந்து மரியாதை செய்தார்கள். நான் என் தாய் தந்தையரைக் கண்டவுடனே பூமியில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்து அவர்களுடைய திருப் பாதங்களை என் கண்ணீராற் கழுவினேன். அவர்கள் ஒவ்வொருவரும் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு நெட்டுயிர்ப்புடன் பொருமி அழுது அவர்களுடைய கண்ணீரால் என்னை ஸ்நானஞ் செய்வித்தார்கள். என்னுடைய பிரிவின் நிமித்தம் அவர்கள் பாதி உடம்பாய் மெலிந்து போயிருந்தபடியால் இப்படிப்பட்ட பக்ஷமுள்ள தாய் தந்தையர்களை விட்டுப் பிரிந்தோமேயென்று நினைத்து நினைத்து நெடுநேரம் விம்மி அழுதேன். பிறகு என் தந்தையார் ஒரு பிரகாரம் அவருடைய பொருமலை அடக்கிக் கொண்டு தேவராஜப் பிள்ளையைப் பார்த்து “ஐயா!`இந்தப் பிள்ளை பிறந்த நாள் முதல் ஒருநாளாவது நான் பிரிந்ததில்லை. அப்படிப்பட்ட என்னை இத்தனை நாளாகப் பிரிந்திருக்கும்படி செய்துவிட்டான். எங்களுக்குப் பிராணன் இவனே யன்றி,