பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

பிரதாப முதலியார் சரித்திரம்

வேறு பிராணன் இல்லை. இவன் பிரிந்த நாள் முதல் நாங்கள் பிராணன் இல்லாத சரீரம் போலிருந்தோமேயல்லாமல் மற்றப்படியல்ல. யுபெற்ற மனம் பித்து பிள்ளை மனங் கல்ரு என்கிற பழமொழியை மெய்யாக்கிவிட்டான். ஆயினும் இவன் மேலே தோஷம் சொல்வதற்கு இடமில்லை. நான் இவளையும் ஞானாம்பாளையும் நிஷ்காரணமாய்த் தூஷித்து ஒரு நாளுஞ் சொல்லாத கடுஞ் சொற்களைப் பிரயோகித்தபடியால் அவர்கள் எங்களைப் பிரியும்படி நேரிட்டது. என்னுடைய குற்றத்தை இப்போது நன்றாக உணருகிறேன். இனி ஒருக்காலும் இவனையும் ஞானாம்பாளையும் நான் தூஷிக்கிறதில்லையென்றும் உங்கள் முன்பாக நான் பிரமாண பூர்வமாகச் சொல்லுகிறேன். இவனும் என்னை ஒருநாளும் பிரிகிறதில்லையென்று பிரமாணம் செய்யவேண்டும்” என்றார். பக்ஷம் நிறைந்த இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே நான் மனம் உருகி என் தகப்பனார் பாதத்தில் விழுந்து “ஐயா! உங்களுக்குச் சொல்லாமல் நான் வெளிப்பட்டது என்மேலே குற்றமேயன்றி உங்கள்மேலே அணுவளவுங் குற்றமில்லை. நீங்கள் எனக்குச் செய்த எண்ணிறந்த உபகாரங்களுக்குப் பிரதியாக என்னுடைய தேகத்தை உங்களுக்குச் செருப்பாய்த் தைத்துப் போட்டாலுந் தகும்; இனி ஒரு நாளும் உங்களுடைய உத்தரவில்லாமல் உங்களைப் பிரிகிறதில்லையென்று நான் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்” என்றேன். இந்தச் சமயத்தில் சம்பந்தி முதலியாரும் வந்து கலந்துகொண்டார். அவர் என்னை ஆலிங்கனஞ் செய்துகொண்டு நெடு நேரம் என்னை விடாமற் பொருமினார். என்னை விட்டுவிட்டால் நான் மறுபடியும் அவருடைய மகளை அழைத்துக் கொண்டு தேசாந்தரம் போய்விடுவேனென்று பயந்து அவர் பிடித்த பிடியை விடாமல் என்னை ஆலிங்கனஞ் செய்ததாகத் தோன்றிற்று. கடைசியாக அவருடைய ஆலிங்கனமும் நின்றது; மூச்சுத் திணறலும் அடங்கிற்று.