பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகசபை திருமணப்‌ பேச்சு

175

பிறகு என் தகப்பனாரும் மாமனாரும் தேவராஜப் பிள்ளையை நோக்கி “ஐயா! எங்கள் பிள்ளைகள் முகம் அறியாத தேசத்திலே போய் என்ன துன்பப்படுகிறார்களோ வென்று நாங்கள் சித்தாங்கிரந்தர்களாயிருந்தோம். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல அவர்கள் உங்களிடத்தில் வந்து சேர்ந்திருக்கிற சமாசாரந் தெரிந்த பிறகு தான் எங்களுக்கு ஆறுதல் உண்டாயிற்று. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றதுபோல் உங்களிடத்தில் வந்து சேர்ந்த பிற்பாடு அவர்களுக்கு என்ன குறைவு இருக்கிறது? ஆனால் அவர்கள் வெளிப்பட்டபிறகு எங்களுடைய கிருகங்கள் தாமரையில்லாத தடாகம் போலவும் சந்திரனில்லாத இரவு போலவும் இருள் அடைந்திருக்கின்றன. ஆகையால் அவர்களைத் தாங்கள் உத்தரவு கொடுக்கவேண்டும். கனக சபைக்குக் கலியாணம் நடக்கும்போது நாங்கள் அகத்தியம் வருகிறோம். அவனுடைய கலியாணத்தை நிறைவேற்றாமல் ஏன் தாமதஞ் செய்கிறீர்கள்?” என்று வினவத் தேவராஜப் பிள்ளை சொல்லுகிறார்:—

“கனக சபை கலியாணத்தை எவ்வளவு சீக்கிரத்தில் முடிக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேனோ அவ்வளவுக்கு அது பிந்திப் போகின்றது. பாளையப்பட்டுச் சம்பிரதாயம் என்னவென்றால் எங்களுக்குள் கலியாணம் நடக்கிறதற்கு முன் கலெக்டர் ரிவின்யூ போர்ட் முதலான அதிகாரஸ்தர்களுக்கு எழுதி உத்தரவு பெற்றுக்கொண்டு கலியாணஞ் செய்கிறது வழக்கம். நான் அந்த அதிகாரஸ்தர்களூக்குப் பல மனுக்கள் அனுப்பியும் யாதொரு மறுமொழியும் வரவில்லை. அந்தக் கலெக்டர் கச்சேரி சிரெஸ்ததார் கேட்டுக்கொண்டபடி என் தங்கை மகளைத் தனக்குக் கலியாணஞ் செய்து கொடுக்கவில்லை யென்கிற அகங்காரத்தினால் கனகசபை கலியாணம் நிறைவேறாதபடி அவன் ஏதேதோ விகற்பங்கள் செய்துவருகிறான். அவ-