பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொழுந்தியாள்‌ பழி வாங்குதல்‌

183

ஷன் தன் தமையனுக்குக் கொடுத்திருப்பானென்று நிச்சயித்துக் கொண்டு அவள் கோப சன்னதத்துடன் புருஷனுக்குத் தெரியாமல் வெளியே புறப்பட்டுக் கொழுந்தனாரைத் தொடர்ந்து கொண்டு ஓடினாள். கொழுந்தனும் அவன் பத்தினி முதலானவர்களும் சிறிது தூரம் போய் வெயிலுக்காக ஒரு பாழ்மண்டபத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அவள் கொழுந்தனைக் கண்டவுடனே அவன் செய்த கொடுமைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லிக்காட்டி அவனை வாயில் வந்தபடி ஏசினாள். அவன் அந்தத் தூஷணங்களைச் சகிக்கமாட்டாதவனாய் அந்தக் கொடியவளைப் பார்த்து “இந்தப் பணத்துக்காகத் தானே இவ்வளவு பேச்சும் பேசுகிறாய்! இந்தா உன் பணம்” என்று சொல்லி அவன் கையிலிருந்த மோகராப் பையை அவள் முன்பாக எறிந்துவிட்டான். அவள் நல்ல காரியம் என்று மோகராப் பையை எடுத்துக்கொண்டு போய்விட்டாள். அவள் சொன்ன தூஷணங்களும் தன்னுடைய சொந்த மனச்சாக்ஷியும் இனிச் சாப்பாட்டுக்கு என்ன செய்வோமென்கிற ஏக்கமுங் கூடி அவனுக்குச் சித்த விகாரத்தை உண்டுபண்ணினபடியால் அவன் தன் பெண்சாதி பிள்ளைகளையுங் கொன்று தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளுகிறதென்று தனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டான். அந்தச் சமயத்தில் அவனுடைய பெண்சாதி பிள்ளைகள் தாகத்துத் தண்ணீர் வேண்டும் என்று சொன்னபடியால் அவன் ஜலங் கொண்டுவருகிறேன் என்று சொல்லிக் குளத்துக்குப் போய் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு அதில் விஷத்தைக் கலந்து தன்னுடைய பெண்சாதிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்து தானும் விஷபானம் பண்ணினான். சற்று நேரத்தில் விஷம் தலைமண்டை கொண்டு அவர்கள் கால்மாடு தலைமாடாய்க் கீழே விழுந்து இறந்துபோய் விட்டார்கள்.

மூத்தவன் எறிந்துவிட்ட மோகராப் பையை எடுத்துக்கொண்டு இளையவன் பெண்சாதி வீட்டிற்குள்