பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

பிரதாப முதலியார் சரித்திரம்

வந்து நுழைந்தாள். அவள் கையில் மோகராப் பையைக் கண்டவுடனே அவளுடைய நாயகனுக்குக் கோபம் உண்டாகி அவளைத் திட்டியடித்து அந்தப் பையைப் பிடுங்கிக்கொண்டு அதைத் தமையனிடத்தில் மறுபடியும் கொடுப்பதற்காக ஓடினான். தமையன் முதலானவர்கள் வெயிலுக்காகப் பாழ்மண்டபத்தில் நுழைந்ததாக இளையவன் வழியிலே கேள்வியுற்று அவனும் அந்தப் பாழ்மண்டபத்துக்குப் போனான். அங்கே எல்லாரும் இறந்து கிடக்கிறதைக் கண்டு அவர்கள் மேலே விழுந்து கோகோவென்று கத்தி அழுதான். பிறகு அவர்கள் சமீபத்திலிருந்த விஷஜல பாத்திரத்தைக் கண்டு அவர்கள் விஷபானம் பண்ணி இறந்து போனதாக அறிந்துகொண்டு அதில் மிஞ்சியிருந்த விஷ ஜலத்தைத் தானுங் குடித்து மரணத்துக்கு ஆயத்தமாய்த் தமையனுடைய பிரேதத்தைக் கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டான். அவன் விஷம் அருந்தினது சில வழிப்போக்கர்களுக்குத் தெரிந்து அவர்கள் என்னிடத்தில் ஓடிவந்து அறிக்கை யிட்டார்கள். நான் உடனே வைத்தியர்களை அழைத்துக்கொண்டு ஓடினேன். மூத்தவனும் அவனுடைய பெண்சாதி பிள்ளைகளும் இறந்து வெகு நேரம் ஆகிவிட்டதால் அவர்களுக்கு வைத்தியஞ் செய்வது நிஷ்பிரயோசனமென்று வைத்தியர்கள் தெரிவித்தார்கள். இளையவன் எல்லோருக்கும் பின்பு விஷம் உண்டபடியால் அவன் இறவாமற் குற்றுயிராயிருந்தான். அவனுக்கு வைத்தியர்கள் ஔஷதப் பிரயோகஞ் செய்து அவன் உண்ட விஷத்தை வெளிப்படுத்தி அவனைப் பிழைப்பித்தார்கள். அவன் எழுந்து உடனே தன் தமையன் முதலானவர்களைப் பிழைக்கும்படி வைத்தியர்களை வேண்டிக்கொண்டான். அவர்கள் பிழைப்பது சாத்தியம் அல்லவென்று அவனுக்குத் தெரிந்தவுடனே அவன் விழுந்து புரண்டு அழுத பரிதாபத்தை ஒருவருங் கண் கொண்டு பார்க்கக்கூடாது. அவனுடைய தமையனுங் குழந்தைகளும் மாண்டு கிடப்பதையும், அவர்கள் மேலே