பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடன்‌ பிறந்தான்‌ அன்பு

185

அவன் விழுந்து விழுந்து அலறி அழுவதையும் பார்த்தவர்களுடைய மனங் கல்லாயிருந்தாலும் கரையாமலிருக்குமா? இரும்பாயிருந்தாலும் இளகாமலிருக்குமா? இளையவனுடைய மனைவியோ என்றால் தன்னுடைய தௌஷ்டியத்தினால் இவ்வளவு பிரமாதம் வந்து விளைந்ததென்று தெரிந்தவுடனே அவள் மதிமயங்கிக் கீழே விழுந்து இன்னமுஞ் சித்த ஸ்வாதீனம் இல்லாமல் இருக்கிறாள். மூத்தவன் ஆதியில் தன் தம்பியை மோசஞ் செய்யாமல் அவனுடைய பாகத்தைக் கிரமப்படி கொடுத்திருப்பானானால் மூத்தவனுக்கு இப்படிப்பட்ட கதி வாய்த்திராதென்பது உறுதி தான். என்றைக்கிருந்தாலும் துன்மார்க்கர்களைக் கடவுள் இந்த உலகத்திலும் தண்டிக்கிறாரென்பதற்கு இந்தச் சரித்திரமே போதுமான சாக்ஷியமாயிருக்கிறது. மேற்படி சங்கதிகளை யெல்லாம் நான் கூலங்கஷமாய் விசாரணை செய்து இறந்து போனவர்களை யெல்லாந் தகனஞ் செய்யும்படி உத்தரவு கொடுத்து வர இந் நேரம் சென்றது”” என்றார்.

தேவராஜப் பிள்ளை அந்தச் சரித்திரத்தைச் சொல்லி முடித்தவுடனே என் தகப்பனார் என்னைப் பார்த்து “நீ கல்வி பயிலும்போது இரண்டு நல்ல சகோதரர்களுடைய சரித்திரத்தை நீ வாசிக்கக் கேட்டிருக்கிறேன். அந்தச் சரித்திரத்தை இப்போது சொல்லு” என்று உத்தரவு கொடுத்தார்கள். தேவராஜப் பிள்ளையும் அதைக் கேட்க விரும்பினபடியால் நான் சொல்லத் தொடங்கினேன்.

“பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகல் (Portugal) தேசத்திலிருந்து கோவா (Goa) பட்டணத்துக்குப் புறப்பட்டு வந்த ஒரு கப்பலில் ஆயிரத்து இருநூறு ஜனங்கள் ஏறியிருந்தார்கள். அந்தக் கப்பல் ஒரு மலையில் மோதி உடைந்துபோனதால் இருபது பெயர்கள் தவிர மற்றவர்கள் எல்லாரும் சமுத்திரத்தில் முழுகி இறந்து போனார்கள். அந்த இருபது ஜனங்களும் ஒரு