பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

சிறு படகிலேறித் தப்பிக்கொண்டார்கள். அவர்களுக்குப் போதுமான புசிகரணங்கள் இல்லாமல் இருந்தபடியால் திருவுளச் சீட்டுப் போட்டுத் தங்களிற் சிலரைக் கடலில் தள்ளிவிடுகிறதென்று தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களுக்குள்ளாக இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவனைக் கடலிலே தள்ளும்படித் திருவுளச் சீட்டு விழுந்தது. அவனை இளையவன் மிகுந்த அன்போடு கட்டித் தழுவி அழுதுகொண்டு மற்றவர்களைப் பார்த்துச் சொல்லுகிறான். “என் தமையனுக்குப் பெண்சாதியும், பிள்ளைகளும் மூன்று சகோதரிகளும் இருக்கிறார்கள். அவர்களைப் போஷிக்கிறதற்கு என் தமையனாரைத் தவிர வேறு கதியில்லை; நானோ ஏகாங்கியா யிருக்கிறேன். நான் இறந்து போவதினால் ஒருவருக்கும் நஷ்டமில்லை. ஆகையால் என்னுடைய ஜேஷ்டருக்குப் பதிலாய் என்னைச் சமுத்திரத்தில் தள்ள வேண்டும்” என்று பிரார்த்தித்தான். தம்பியினுடய பக்ஷ மிகுதியைக் கண்டு தமையன் ஆச்சரியம் அடைந்து “இப்படிப்பட்ட உத்தம சகோதரனை எனக்காக இறக்கும்படி செய்வது அநீதியானதால் என்னையே தள்ளிவிட வேண்டும்” என்று மன்றாடினான். மூத்தவனைக் கடலில் தள்ளாதபடி இளையவன் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டான். அவன் எவ்வளவு பலமாகத் தமையனைக் கட்டிக் கொண்டானென்றால் அவர்கள் இருவரையும் வெவ்வேறாய்ப் பிரிப்பது அசாத்தியமாயிருந்தது. இறுதியில் இளையவனுடைய தொந்தரவைப் பொறுக்கமாட்டாமல் அவனுடைய இஷ்டப்படி அவனைச் சமுத்திரத்தில் தள்ளிவிட்டார்கள். அவன் நல்ல நீச்சுக்காரணானதால் அவன் நீஞ்சிக் கொண்டு வந்து அந்தப் படகின் சுக்கானை ஒரு கையாலே பிடித்தான். அந்தக் கையை ஒரு மாலுமி வாளாலிலே வெட்டி விட்டான். அவன் உடனே சமுத்திரத்தில் விழுந்து எழுந்து படகை மற்றொரு கையாற் பிடித்தான். அந்தக் கையையும் அந்தப் பாவிப்பயல் தறித்து விட்டான். அவன் இரண்டு கைகளையும் இழந்-