பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாலி கட்ட மறந்து தடுமாறுதல்‌

213

அவர் ஆலோசித்துக் கடைசியாய்க் கலியாண வீட்டுக்குப் போய் தாமும் படுத்திருந்த நடுச்சாமத்தில் எல்லாரும் உறங்குகின்ற சமயத்தில் அந்தத் தாலியைப் பெண் கழுத்தில் கட்டிவிடுகிறதென்று நிர்த்தாரணஞ் செய்துகொண்டார். அவர் வீட்டில் இராப்போஜனஞ் செய்தபிறகு புறப்பட்டு முகூர்த்த வீட்டுக்குப் போய்த் தாமும் ஒரு பக்கத்திலே போய்ப் படுத்துக்கொண்டார். அவர் அர்த்த சாமத்தில் நிசப்தமாக எழுந்து கலியாணப்பெண் படுத்துத் தூங்குகிற அறைக்குள் நுழைந்து யாருடைய கழுத்தில் தாலியில்லாமல் வெறுங் கழுத்தாயிருக்கிறதென்று நிச்சயிக்கும் பொருட்டு எல்லாப் பெண்களுடைய கழுத்துக்களையும் ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்துக்கொண்டு வந்தார். அந்தப் பெண்களுடனே கூட விதந்துவாய்ப் போன ஒரு பெண்ணும் படுத்துத் தூங்கினாள். அவள் கழுத்தில் தாலியில்லாமலிருந்ததால் அவள் தான் அந்தக் கலியாணப் பெண்ணென்று புரோகிதர் நிச்சயித்துக் கொண்டு அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டி அமங்கலையைச் சுமங்கலியாக்கிவிட்டார். விடிந்த உடனே விதந்து கழுத்தில் தாலியிருப்பதையும், கலியாணப் பெண் கழுத்துத் தாலியில்லாமல் வெறுமையாயிருப்பதையும் எல்லாரும் பார்த்து ஆச்சரியம் அடைந்து, இது வெளியானால் வெட்கக்கேடு என்று நினைத்துச் சில பெண்கள் அந்த விதந்து கழுத்திலிருந்த தாலியை அவிழ்த்து மணப்பெண் கழுத்திலே கட்டிவிட்டார்கள். புரோகிதர் செய்த மாறுபாட்டை அவர் என்னிடத்தில் ஒப்புக்கொண்டபடியால் அந்த ரகசியம் எனக்கு மட்டுந் தெரியும்; வேறொருவருக்கும் தெரியாது. இந்த விஷயத்தில் எனக்கு இரண்டு சாஸ்திர சங்கைகள் இருக்கின்றன. முதலாவது சாஸ்திரப்படிக்கும் தேசாசாரப் படிக்கும் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டவேண்டியது அநிவாரியமானபடியால் அந்தப்படி தாலி கட்டப்படாத மேற்படி கலியாணம் செல்லுமா? செல்லாதா? அது செல்லாமலிருக்கிற பட்சத்தில் அநேக புத்திர பௌத்திரர்களைப்