பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

பிரதாப முதலியார் சரித்திரம்

நீரால் திருமஞ்சனம் ஆட்டி, திவ்விய வஸ்திராபரணங்கள் பூட்டி, ஸ்வர்ண மயமாயும் நவரத்தின கஜிதமாயும் அலங்கரிக்கப்பட்ட கலியாண மண்டபத்தில், கோடி சூரியர்கள் தீபக் கோடிகள் பிரகாசிக்க, சமுத்திர கோஷம் போல் நானாபேத மங்கல வாத்தியங்கள் முழங்க, மயிற்கூட்டங்கள் போல் நாட்டியப் பெண்கள் நடனஞ்செய்ய, குயிற்கூட்டங்கள் போற் பாடினிகள் சுபசோபனம் பாட, கோதானம், பூதானம் முதலிய மாதானங்களுடன் கனகசபையின் கலியாணம் நடந்தேறியது. நாங்கள் செய்ய வேண்டிய சீர் வரிசைக ளெல்லாம் ஏராளமாகச் செய்தோம்.

தேவராஜப் பிள்ளை கிருகத்தில் கனகசபையின் கலியாணத்துடன் இன்னும் மூன்று கலியாணங்கள் நடந்தன. அந்த நாலு கலியாணங்களும் ஒரே முகூர்த்தத்தில் நடந்தபடியால் புரோகிதப் பிராமணர் நாலு மங்கிலியங்களையும் வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாய் எடுத்து அபிமந்திரித்து ஆசீர்வதித்து மாப்பிள்ளைகள் கையில் கொடுக்க அவர்கள் வாங்கிப் பெண்கள் கழுத்திலே கட்டினார்கள். இந்தப் பிரகாரம் கனகசபை உள்பட மூன்று மாப்பிள்ளைகள் மங்கிலியஞ் சூட்டினார்கள். ஒரு மாப்பிள்ளையினுடைய மங்கலியத்தை மடியிலே வைத்துக்கொண்டு மறந்துபோய் விட்டதால் அந்த மாப்பிள்ளை தாலி கட்டவில்லை. அதை அந்த மாப்பிள்ளையாவது பெண்ணாவது மற்றவர்களாவது கவனிக்கவில்லை. இரா முகூர்த்தம் ஆனதால் எல்லாக் காரியங்களுஞ் சரியாய் நடந்திருக்குமென்று நினைத்துக் கொண்டார்கள். அன்றைக்கு நடக்க வேண்டிய கலியாணச் சடங்குகளெல்லாம் முடிந்து புரோகிதர் வீட்டுக்குப் போனபிறகு ஒரு மங்கலியம் தன்னுடைய மடியிலிருப்பது அவருக்குத் தெரிந்தது. உடனே திடுக்கிட்டு ““ஐயையோ! இந்த விஷயம் விடிந்த உடனே கலியாணக்காரர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் என்னைச் சும்மா விடமாட்டார்களே! நான் என்ன செய்வேன்!”” என்று