பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

பிரதாப முதலியார் சரித்திரம்

அவன் முன்பாக விட்டெறிந்தான். உடனே தையற்காரன் “இந்தா! உன் காது” என்று விட்டெறிந்தான். பிறகு அந்தத் தையற்காரன் திருடனைப் பிடித்துக் கொண்டு வந்து தேவராஜப் பிள்ளை முன்பாக விட்டான். திருடன் தேவராஜப் பிள்ளை முன்பாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டு சொல்லுகிறான்:—

“ஐயா! நான் ஒரு பெரிய குடும்பி. எனக்கு ஒரு பெண்சாதியும், பல பிள்ளைகளும் அதிக விருத்தாப்பியமான தாய் தந்தைகளும், விதந்துவாய்ப் போன இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள். அவர்களைச் சம்ரக்ஷிப்பதற்கு என்னைத் தவிர வேறே நாதன் இல்லை. நான் தேகப்பிரயாசைப்பட்டு அவர்களை ஆதரித்து வந்தேன். இப்போது பஞ்ச காலமானதால் எனக்கு எங்கும் வேலை அகப்படவில்லை. யாசகங் கொடுப்பாரும் இல்லை; நான் ஒருவன் மட்டும் பட்டினியாயிருந்தால் எப்படியாவது சகித்துக் கொள்வேன். அதிவிருத்தர்களான என் தாய் தந்தையர்களும் சிறு பிள்ளைகளும் மற்றவர்களும் பல நாள் பட்டினியாயிருப்பதைப் பார்த்துச் சகிக்க மாட்டாமல் நான் இந்தத் திருட்டுத் தொழிலில் பிரவேசித்தேன்; ஆனால் பெண்டுகளிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் நல்லவர்களிடத்திலும் திருடுகிறதில்லையென்றும், லோபிகளிடத்திலும் பாவிகளிடத்திலும் மட்டுந் திருடுகிறதென்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறேன்.

இப்போது நான் ஒரு ரூபா திருடினதற்காக என்னைத் தண்டிக்கப் போகிறீர்கள்; நான் அந்தத் தையற்காரனிடத்தில் ஒரு ரூபா கடன் வாங்கிக்கொண்டு பிறகு அதைக் கொடாமல் மோசஞ் செய்திருப்பேனானால் என்னைத் தண்டிப்பீர்களா? பிரதி தினமும் ஆயிரம், பதினாயிரம், லக்ஷம் பொன் கடன் வாங்கிக் கொண்டு அந்தக் கடனைக் கொடாமல் மாறுபாடு செய்கிறவர்களுக்குக் கணக்குண்டா? இவர்கள் எல்லாரும் எங்களுக்கு அண்ணன்மார்கள் அல்லவா? எங்க ளுடைய திருட்டுக்கும் அவர்-