பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகற்‌ கொள்ளைக்கார்

217

களுடைய திருட்டுக்கும் பேதம் என்னவென்றால், நாங்கள் பொய்யும் புரட்டும் பேசாமல் எங்கள் கையில் அகப்பட்டதைக் கவர்ந்து கொள்ளுகிறோம். அவர்கள் ஆயிரம் பொய் சொல்லிக் கடன் வாங்கிக் கொண்டு, பிறகு அதைக் கொடாமல் தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு, எத்தனையோ சூதுகளும் வாதுகளும் பொய்ச் சத்தியங்களுஞ் செய்கிறார்கள். அவர்களுடைய திருட்டில் பொய்யும் புரட்டும் நம்பிக்கைத் துரோகமும் ருண பாதகமும் கலந்திருக்கின்றன. எங்களுடைய திருட்டில் அப்படிப்பட்ட தோஷங்கள் கலக்கவில்லை. ஒரு ரூபா திருடின என்னை ஒரு மாசம் காவலிலிருக்கும்படி நீங்கள் தீர்மானித்தால் பெருங் கொள்ளைக்காரர்களாகிய அந்த ருண பாதகர்களையாவது ஜீவ பரியந்தந் தண்டிக்க வேண்டாமா?

நான் திருட ஆரம்பிப்பதற்கு என்னுடைய தரித்திரத்தைக் காரணமாகச் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இப்படிப்பட்ட யாதொரு காரணமும் இல்லாமல் அநேக அரசர்கள் அந்நிய ராஜாக்களுடன் யுத்தத்துக்குப் புறப்பட்டு வழிகளில் இருக்கிற கோட்டை கொத்தளங்கள் மாளிகைகளையெல்லாம் இடித்து. கோடானு கோடி ஜனங்களை மாய்த்து அகப்பட்ட பொருள்களையெல்லாம் சர்வ கொள்ளை அடிக்கிறார்களே! அந்த அரசர்களும் எங்களுடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா? அலெக்ஸாண்டர் (Alexander) முதலிய சுத்த வீரர்கள் தாங்கள் பிடித்த தேசங்களை மறுபடியும் கொடுத்து விட்டதாக அவர்களுக்குப் புகழ்ச்சியாகச் சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள். புருஷர்களையெல்லாங் கொலை செய்து அவர்களுடைய மாட மாளிகைகளையெல்லாங் கொள்ளையிட்டபிறகு, நிராதரவான கைம்பெண்சாதிகளும் சிறு பிள்ளைகளும் நிறைந்த தேசத்தை மறுபடியும் பழைய அரசனுக்குக் கொடுப்பதினால் என்ன பிரயோசனம்? அப்படிக் கொடுப்பது பெருமையாயிருக்குமானால் நானும் திருடிய ஒரு ரூபாயை மறுபடியும் அந்தத் தையற்காரன் முன்பாக எறிந்து விடவில்லையா?