பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

பிரதாப முதலியார் சரித்திரம்

அலெக்சான்றார் முதலிய சுத்த வீரர்கள், தங்கள் சத்துருக்களுடைய பெண்சாதி பிள்ளைகளை உபத்திரவம் செய்த தில்லை யென்று, சரிதாசிரியர்கள் சொல்லுகிறார்கள். பெண்டுகளையும் பிள்ளைகளையும் திருடுகிற தில்லை யென்று, நானும் பிரதிக்ஞை செய்து கொள்ள வில்லையா? ஒரு கொலை செய்தவனுக்கு, மரண தண்டனை விதிக்கிறீர்கள். அப்படியானால், இலக்ஷாதி லக்ஷம் கொலைகளும் கொள்ளைகளும் செய்கிற அந்த அரசர்களுக்கு, எப்படிப் பட்ட தண்டனை விதிக்க வேண்டும்? பின்னும், ஜனங்கள் தாங்கக் கூடாத பல வரிகளைச் சுமத்திக் கொடுமை செய்கிற அரசர்களும், பெரும் கொள்ளைக் காரர்கள் தானே? ஒரு கொடுங்கோல் மன்னன் அநியாய வரிகள் வாங்கினபடியால், ஒரு எளியவன் தனக்கு வரி கொடுக்க நிர்வாகமில்லையென்று, அரசனுக்கு அறிவித்தான். அரசன், "நீ வரி கொடாவிட்டால், நம்முடைய தேசத்திலிருக்கக் கூடாது" என்றான். எளியவன், "நான் எங்கே போவேன்!" என்று சொல்ல, அரசன், "சீரங்கப் பட்டணத்துக்குப் போ" என்றான். எளியவன், "சீரங்கப் பட்டணத்தை உம்முடைய அண்ணன் ஆளுகிற படியால், நான் அங்கே போக மாட்டேன்" என்றான். அரசன், "தஞ்சாவூருக்குப் போ" என, எளியவன், "அங்கேயும் உம்முடைய சிற்றப்பன் ஆளுகிறானே!" என்றான். "அப்படியானால், நரகத்துக்குப் போ" என்று அரசன் கோபத்தோடு சொல்ல, "அங்கே உம்முடைய தகப்பன், பாட்டன் முதலானவர்கள் நிலை பெற் றிருப்பதால், நான் அங்கேயும் போக மாட்டேன்” என்று எளியவன் மறுத்து விட்டான். இப்படிப்பட்ட கொடுங்கோல் மன்னர்களைப் பார்க்கிலும், நாங்கள் பொல்லாதவர்களா?


நியாயாதிபதிகள் முதலிய அதிகாரிகள் பரிதானத்தை அபேக்ஷிக்காத படி, அவர்களுக்குத் துரைத்தனத்தார் போதுமான சம்பளங்களை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். அப்படியிருந்தும், அந்த அதிகாரிகள், பிரதி வழக்கிலும், உபய வர்திக ளிடத்திலும், கைலஞ்சம் வாங்கிக் கொண்டு, அதைச் சீரணிப்பிக்கும் பொருட்டு, இரு