பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்ல மாப்பிள்ளையும்‌, கள்ள மாப்பிள்ளையும்‌

235

உடைமைகள் அல்லவா? அவைகளுக்கு வாயிருந்தால் அவைகளே எங்களுக்குச் சாக்ஷி சொல்லுமே!” என்று வெண்கலக் கடையில் மதயானை புகுந்தது போல் மடமடவென்று மூச்சு விடாமல் நெடு நேரம் பேசினான். இதைக் கேட்டவர்கள் அஞ்சாத சிங்கம் தான் உண்மையான மாப்பிள்ளையென்றும் உண்மையான மாப்பிள்ளையைத் திருடனென்றுங் கிராஹியஞ் செய்தார்கள்; அஞ்சாத சிங்கமே தாலி கட்டிக் கலியாணம் முடிந்து போய்விட்டபடியால் எல்லாரும் அவன் பக்ஷத்திலிருந்தார்கள். உண்மையான மாப்பிள்ளையானவன் நெடு நேரம் மலைத்துப் போயிருந்து பிறகு சொல்லுகிறான்:- “கலியாணம் நிறைவேறிக் காரியம் முடிந்து போய் விட்டதால் இனி மேல் நான் இன்னானென்று நிரூபணஞ் செய்வதினால் ஒரு லாபமுமில்லை. ஆயினும் என்னை அவன் திருடனென்று சொல்லுகிறபடியால் அவன் திருடனா நான் திருடனா வென்று ஒரு நிமிஷத்தில் மெய்ப்பிக்கிறேன். இந்த ஊரிலும் எனக்கு அறிமுகமான சில கனவான்களிருக்கிற படியால் அவர்களை அழைத்து வந்து உங்களுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறேன்” என்று சொல்லி அவனும் அவனுடன் கூட வந்தவர்களும் வெளியே புறப்பட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் வீண் போக்குச் சொல்லிப் போய்விட்டதாகவும், இனி மேல் திரும்பி வரமாட்டார்களென்றும் பெண் வீட்டார்கள் எண்ணிக் கொண்டார்கள். ஆனால் அஞ்சாத சிங்கம் மட்டும் அஞ்சுகிற சிங்கம் ஆனான். ““தன் நெஞ்சு அறியாத பொய் இல்லை, தாய அறியாத சூல் இல்லை”” என்பது போல், தான் செய்த காரியந் தனக்கே தெரியுமானதால் அந்த உண்மையான மாப்பிள்ளை தகுந்த மனுஷர்களைக் கொண்டு வந்து உண்மையை ருசிப்பித்தால் என்ன செய்கிறதென்ற பயங்கரம் அஞ்சாத சிங்கத்தைப் பிடித்துக் கொண்டது. கலியாண வீட்டில் எல்லாரும் பலபல வேலைகளிற் பிரவேசித்துப் பராக்கா யிருக்கும் போது அஞ்சாத சிங்கமும் அவனைச் சேர்ந்தவர்களும் அவர்கள் மேலே தரித்திருந்த விலை மதிக்கக்கூடாத,