பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

பிரதாப முதலியார் சரித்திரம்

முதல் என்னுடைய கிருகமும் திரவியங்களும் என்னுடைய மகளும் உம்முடைய ஆதீனந்தான்” என்று சொல்லிச் சொல்லி நடுச்சாமம் வரைக்கும் மாப்பிள்ளையைப் புகழ்ந்து கொண்டிருந்தான். மறு நாள் உதய முகூர்த்தமானதால் நடுச் சாமந் துவக்கி மணமகளையும் மணமகனையும் அலங்காரஞ் செய்தார்கள். விடிந்த உடனே மணமகன் மணக்கோலத்துடன் கல்யாண பீடத்தில் உட்கார்ந்து பெண்ணுக்குத் திருமாங்கலியமுஞ் சூட்டினான். வேத விதிப்படி நடக்கவேண்டிய மற்றக் கிரியாசாரங்களும் கிரமப்படி நடந்தன. இவ்வாறாகத் திருட்டு மாப்பிள்ளைக்கும் மோகனமாலைக்கும் விவாகம் நிறைவேறிய பின்பு, நாகப்பட்டணத்திலிருந்து உண்மையான மாப்பிள்ளையாகிய நல்லதம்பி பிள்ளையும் அவனுக்குச் சொந்தமான சில புருஷர்களும் வந்து கலியாண வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் ஒருவருக்கும் முகப்பழக்கமில்லாதவர்களான படியால் அவர்கள் யாரென்று அருமைநாத பிள்ளை வினவினான். உடனே நல்லதம்பி பிள்ளை தான் இன்னானென்று தெரிவித்ததுந் தவிரத் தானும் மற்றவர்களும் புறப்பட்டு மார்க்கத்தில் வரும்போது கொள்ளை நடந்ததும், தாங்கள் ஊருக்குத் திரும்பிப் போய்ச் சாமான்கள் சேகரித்துக் கொண்டு வந்ததும் முதலான விவரங்களையும் தெரிவித்தான். இதைக் கேட்டவுடனே அங்கே இருந்தவர்களெல்லாம் பிரமித்து மயங்கி நின்றார்கள். உடனே திருட்டு மாப்பிள்ளையாகிய அஞ்சாத சிங்கம் அந்த உண்மையான மாப்பிள்ளையைப் பார்த்து “அட! சண்டாளா! என் தகப்பனை உன் தகப்பனென்றும், என் பெயரை உன் பெயரென்றும் சுத்த அபாண்டமான பெயரைச் சொல்லுகிறாயே! உன் தலை மேலே இடி விழாதா? நீயும் இப்போது வந்திருப்பவர்களுந் தானே எங்களை வழிப்பறி செய்தீர்கள். அது போதாதென்று மாப்பிள்ளை வேஷம் போட்டுக் கொண்டு இங்குந் திருட வந்துவிட்டீர்களா? இப்போது நீங்கள் தரித்திருக்கிற ஆடையாபரணங்கள் எங்கள்