பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்ள மாப்பிள்ளைக்கு உபசாரம்‌

233

திருடர்கள் வந்து வளைத்துக்கொண்டு எங்கள் கைவசமாயிருந்த சகல சொத்துக்களையுங் கொள்ளை யடித்துக் கொண்டு போய்விட்டார்கள். என்னுடைய இடுப்பிலிருக்கிற பாடி வஸ்திரந் தவிர மற்ற வஸ்திராபரணங்களையெல்லாங் கொள்ளை போய்விட்டன. எங்களுடன் கூட வந்த மற்றப் புருஷர்களும் ஸ்திரீ ஜனங்களும் இடுப்பிற் கட்டிக் கொள்ளக் கூடத் தகுந்த வஸ்திரம் இல்லாமையினால் கலியாண வீட்டுக்கு வர வெட்கப்பட்டு நாகப்பட்டணத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். நீங்கள் குறித்த முகூர்த்தம் தவறிப் போகாமலிருக்க வேண்டியதற்காக நாங்கள் ஆறு பேர் மட்டும் ஊருக்குத் திரும்பாமல் உங்களிடம் வந்து சேர்ந்தோம்” என்றான். இதைக் கேட்டவுடனே அருமைநாதப் பிள்ளையும் மற்றவர்களும் அவன் உண்மையான மாப்பிள்ளையென்றும் அவன் சொன்னதெல்லாம் யதார்த்தமென்றும் நம்பிக்கை கொண்டார்கள். மாப்பிள்ளையைப் பார்த்தவுடனே மாமனாருக்கு ஒரு புஜம் இரு புஜமாகவும் இரு புஜம் இருபத்து நாலு புஜமாகவும் ஆயின. மாமியார் எட்டி எட்டிப் பார்த்து மனம் பூரித்தாள். மணமகள் அடுத்த அறையிலிருந்துகொண்டு மணமகனுடைய இனிமையான குரலைக் கேட்டுக் கேட்டு மன மகிழ்ந்தாள். அருமைநாத பிள்ளை அந்தத் திருட்டு மாப்பிள்ளையை நோக்கிச் சொல்லுகிறான்:- “என்னுடைய அருமையான மாப்பிள்ளைத் துரையே! உம்மைக் கண்டேன்; கண் குளிர்ந்தேன்; உம்மைத் தரிசித்தது எனக்கு நேத்திரோற்சவஞ் செய்தது போலிருக்கின்றது. என்னுடைய மகளுடைய பாக்கியமே பாக்கியம்! ரதிக்கு மன்மதன் வாய்த்தது போலவும், இந்திராணிக்கு இந்திரன் வாய்த்தது போலவும், என்னுடைய மகளுக்கு மணவாளனாக வந்து வாய்த்தீர்! இப்படிப்பட்ட லோகோத்தரமான மாப்பிள்ளை யாருக்காவது கிடைக்குமா? திருடர்களிடத்திலே பறி கொடுத்ததைப் பற்றி நீர் எவ்வளவுஞ் சிந்திக்க வேண்டாம். இந்த நிமிஷ