பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

பிரதாப முதலியார் சரித்திரம்

பெண்ணுக்குத் தாலி கட்டி ஒரு ராத்திரி மட்டும் அங்கே தங்கியிருந்து அகப்பட்ட சொத்துக்களை யெல்லாங் கவர்ந்துகொண்டு ஓடிவந்து விடலாமென்று யோசிக்கிறேன்” என்றான். இதைக் கேட்டவுடனே மற்றவர்கள் அவனைப் பார்த்து “தம்பீ! உன்னுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம். ராஜரீக தந்திர நிபுணர்களுக்குக் கூட உன்னுடைய புத்தியும் யுக்தியும் வருமா? அஞ்சாத சிங்கம் என்ற பெயர் உனக்கே தகும். நீ சொல்லுகிற காரியம் நிறைவேறி நம்முடைய எண்ணம் முற்றினால் இராமாயணம் மகாபாரதம் முதலிய மகா காவியங்கள் போல் உன் சரித்திரத்தையும் வித்வான்களைக் கொண்டு பாடுவித்து உன்னைத் தெய்வீகம் ஆக்கிவிடச் சித்தமாயிருக்கிறோம்” என்றார்கள். ஆனால் சில திருடர்கள் அஞ்சாத சிங்கத்தின் அபிப்பிராயத்தை அங்கீகரிக்காமல் அவர்களுடைய பாகச் சொத்தை வாங்கிக் கொண்டு தங்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். அஞ்சாத சிங்கம் உள்பட ஆறு திருடர்கள் மட்டும் பெண்வீட்டுக்குப் போகவும் நினைத்த காரியத்தை முடிக்கவும் துணிந்தார்கள்.

அஞ்சாத சிங்கம் முகவசீகரம் உள்ளவனாகவும், பராக்கிரமசாலியாகவும் இருந்தபடியால் அவன் மணமகன் போல வேஷம் பூண்டுகொண்டான். மற்றவர்கள் எல்லாரும் அவனுடன் கூடக் கலியாணத்துக்கு வந்த பந்துக்கள் போலப் புருஷீகரித்தார்கள். அவர்கள் எல்லாரும் புறப்பட்டு முகூர்த்த தினத்துக்கு முந்தின நாள் இரவில் பெண் வீட்டிற் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் யாரென்று அருமைநாத பிள்ளையும் அவனுடைய மனைவியும் வினவ, அவர்களைப் பார்த்து அஞ்சாத சிங்கம் சொல்லுகிறான்:- நாகப்பட்டணத்திலிருக்கும் நல்லதம்பி பிள்ளை நான் தான்; உங்களுடைய உத்தரவுப் படி புருஷர்களும் ஸ்திரீகளும் உட்பட நாங்கள் இருபது பேர் புறப்பட்டு வழியில் வரும் போது,