பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்ளர்‌ சூழ்ச்சி

231

கொண்டு அவர்கள் கையிலிருந்த சகல சொத்துக்களையும் பறித்துக் கொண்டு ஓடிப் போய்விட்டார்கள். மாப்பிளை முதலானவர்களுக்கு இடுப்பில் கட்டிக் கொள்வதற்குக் கூட வஸ்திரமில்லாமற் சகல சொத்துக்களையும் இழந்து கோவணாண்டிகளாகி விட்டதால் அந்தக் கோலத்தோடு கலியாண வீட்டுக்குப் போக வெட்கப்பட்டுக் கொண்டு அவர்கள் நாகப்பட்டணத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். கள்ளர்களே என்றால் அவர்கள் கொள்ளையடித்த ஆஸ்திகளைப் பிதுரார்ஜிதம் போல் பாகித்துக் கொண்டார்கள். மாப்பிளையினுடைய வேலைக்காரனே திருடர்களுக்கு உளவாயிருந்து திருடும்படி செய்வித்ததால், அவன் மூலமாகப் பெண் வீட்டுக் காரர்களுடைய ஊர், பெயர் முதலான சகல விவரங்களையும் திருடர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களில் “அஞ்சாத சிங்கம்” என்று பெயர் கொண்ட ஒரு சோரன் மற்றவர்களைப் பார்த்துச் சொல்லுகிறான்:—

““அண்ணன்மார்களே! கலியாணக்காரர்களிடத்தில் அடிக்கிற கொள்ளையேயல்லாமல் மற்றக் கொள்ளைகளெல்லாம் கொள்ளையே. இந்த ஒரு திருட்டில் நமக்கு எவ்வளவோ திரவியங்கள் கிடைத்தன. நாம் பத்து மாசம் வரைக்கும் ஓயாமல் திருடினாலும் இவ்வளவு சொத்துகள் நமக்குக் கிடைக்குமா? நாம் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடத்தில் திருடிக் கொண்டதால் இனி மேல் பெண் வீட்டுக்காரகளிடத்திலும் திருடுவது நியாயமாயிருக்கின்றது. பெண் வீட்டுக்காரர்களுடைய ஊர், பெயர் முதலான சகல விவரங்களும், முகூர்த்த தினமும் உளவன் மூலமாக நாம் அறிந்து கொண்டோம். அவர்களுக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் இதற்கு முன் பரிச்சயமில்லை யென்பதும் நன்றாய் விளங்குகின்றது. ஆகையால் நாம் பெண் வீட்டுக்குப் போய் நாமே நாகப்பட்டணத்திலிருந்து வந்த மாப்பிள்ளை முதலானவர்களென்று பாசாங்கு பண்ணி அந்தப்