பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

பிரதாப முதலியார் சரித்திரம்

அகப்பட்டபோது அவள் திடுக்கிட்டு நடுநடுங்கித் தான் திருடவேயில்லை யென்று சொல்லி அழுதாள். உடனே அவளுடைய சிறிய தாயார் அவளைப் பார்த்து “நீலிக்குக் கண்ணீர் நிலைமையிலே என்பது போல் ஏன் கள்ள அழுகை அழுகிறாய்? நீ திருடாவிட்டால் அந்தப் பை உன் பெட்டியில் எப்படி வந்திருக்கக் கூடும்? கையுங் களவுமாக அகப்பட்டுக் கொண்ட பிறகு கூட ஏன் பாசாங்கு பண்ணுகிறாய்? நீ எப்போதும் பசப்புக் கள்ளி யென்பது எனக்குத் தெரியாதா?” என்றாள். சிறிய தாயாருடைய வார்த்தையை மறுத்துப் பேசத் துணியாமல் குணபூஷணி அழுதுகொண்டு மௌனமாயிருந்தாள். அவளுடைய முகத் தோற்றத்தினாலும் நிஷ்கபடமான வார்த்தைகளாலும் அவள் மாசற்றவளென்று ஊரிலிருந்து வந்த ஸ்திரீகள் அபிப்பிராயப் பட்டாலும் அவளுடைய சிறிய தாயாரே அவள் மேலே தோஷாரோபணம் பண்ணினபடியால் அவள் தோஷக்கிரஸ்தி யென்று அவர்களும் நினைக்கும்படியா யிருந்தது. ஆகையால் அவர்கள் ஆதியிற் கொண்ட கருத்தை மாற்றி மோகனமாலையைக் கன்னிகாதானஞ் செய்து கொடுக்க வேண்டுமென்று அவளுடைய தாய் தந்தையரைப் பிரார்த்தித்தார்கள். அதற்கு அவர்கள் நிராக்ஷேபமாகச் சம்மதித்தார்கள். மணமகனுடைய ஊர் தூரமானதால் ஒரு மாசத்துக்குப் பிறகு விவாகஞ் செய்கிறதென்று முகூர்த்த தினமுங் குறிக்கப் பட்டது. அந்த ஸ்திரீகள் நாகப்பட்டணத்துப் போய் மணமகன் முதலானவர்களை அழைத்துக் கொண்டு முகூர்த்த நாளைக்கு முன் வந்து சேர்வதாகச் செலவு பெற்றுக்கொண்டு போய் விட்டார்கள். கலியாணத்துக்கு வேண்டிய ஆடையாபரணங்கள் சாமக்கிரியைகள் முதலியவைகளை யெல்லாம் சேகரஞ் செய்துகொண்டு மாப்பிள்ளை முதலானவர்கள் நாகப்பட்டணத்தை விட்டுப் புறப்பட்டார்கள். அவர்கள் சில நாள் யாத்திரை செய்த பின்பு ஒரு நாள் காட்டின் மத்தியில் போகும்போது, திருடர்கள் வந்து வளைத்துக்