பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாற்றாந்தாய்‌ கொடுமை

229

புஷ்பத்தை மறைத்து வைத்தாலும் அதனுடைய வாசனை காட்டிவிடுவது போல, குணபூஷணி குளிக்காமலும் முழுகாமலும், நல்ல ஆடையாபரணங்களைத் தரியாமலும் இருந்த போதிலும் அவளுடைய அழகுங் குணமும் ஊரெங்கும் பிரகாசித்தபடியால், அவளை மணங் செய்ய விரும்பாதவர்கள் இல்லை. விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டினது போல, மோகனமாலை சர்வாபரணபூஷிதையா யிருந்தாலும் அவளுடைய துர்க்குணம் யாவருக்கும் பிரசித்தமான படியால் அவளை மணஞ்செய்ய விரும்புவார்களும் இல்லை. அதனால் அவளுடைய தாயாருக்கு அதிக பொறாமையும் மாற்சரியமும் உண்டாகி குணபூஷணி மேலே இல்லாத தோஷங்களைக் கற்பித்து அவளை ஒருவருங் கொள்ளாதபடி விகாதஞ் செய்து வந்தாள். நாகப்பட்டணத்திலிருக்கும் நல்லதம்பி பிள்ளையென்று பெயர் கொண்ட ஒரு கனவானுக்குப் பென் விசாரிக்கிறதற்காகச் சில ஸ்திரீகள் ஆதியூருக்கு வந்தார்கள். அவர் அருமைநாத பிள்ளைக்கு இரண்டு புத்திரிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு அந்தப் பெண்களுடைய குணத்தைத் தாங்களே நேராக அறிந்து கொள்ளும்பொருட்டுச் சில நாள் வரைக்கும் அருமநாதப் பிள்ளை வீட்டிலே தங்கியிருந்தார்கள். அவர்கள் குணபூஷணியே யோக்கியமான பெண்ணென்று அதி சீக்கிரத்தில் கண்டுபிடித்துக் கொண்டார்கள். அவர்களுடைய அபிப்பிராயம் சிறிய தாயாருக்குத் தெரிந்து, அந்த நல்ல அபிப்பிராயத்தைக் கெடுக்கும்பொருட்டு அவள் குணபூஷணி மேலே பிரமாண்டமான ஒரு திருட்டுக் குற்றத்தைச் சுமத்த ஆரம்பித்தாள். பெண் பார்க்க வந்திருந்த அந்த ஸ்திரீகளுடைய பணப்பையைச் சிறிய தாயார் திருடி ஒருவருக்குந் தெரியாமல் குணபூஷணியினுடைய பெட்டியில் வைத்து மறைத்து விட்டாள். அந்த ஸ்திரீகள் பணப்பையைக் காணோமென்று தேடினபோது, எல்லோருடைய பெட்டிகளையுஞ் சோதிக்கும்படி சிறிய தாயாரே அவர்களைத் தூண்டிவிட்டாள். ஒருவருடைய பெட்டியிலும் பணப்பை அகப்படாமல் குணபூஷணியின் பெட்டியில்