பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

பிரதாப முதலியார் சரித்திரம்

கள். கலியாணம் நடந்த மறு வருஷத்தில் மூத்தவள் ஒரு பெண் குழந்தை பெற்றாள். அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாசத்துக்குப் பின்பு இளைய தாரமும் ஒரு புத்திரியைப் பெற்றாள். மூத்த தாரத்தின் மகள் பேர் குணபூஷணி. இளைய தாரத்தின் மகள் பெயர் மோகனமாலை. அந்தப் பெண்களுக்குப் பத்து வயசு நடக்கும்போது மூத்த தாரம் இறந்து அவளுடைய முன்னோர்கள் போன இடத்துக்குப் போய்விட்டாள். அவள் இறந்துபோன பிறகு அவளுடைய மகளான குணபூஷணி, இடத்தில் கஷ்டகாலம் வந்து இஷ்டஞ் செய்ய ஆரம்பித்தது. சிட்டுக் குருவி மேல் பாரதந் தொடுத்தது போல, சிறிய தாயாரும் அவளுடைய மகளும் குணபூஷணியை எப்போதும் சிறுமைப் படுத்தினார்கள். மோகன மாலை கட்டிக் கழித்த பழந்துணிகளைக் கட்டிக் கொள்ளுகிறதே யல்லாது, குண பூஷணி நல்ல வஸ்திரங்களைக் கட்டி அறியாள். எல்லாருஞ் சாப்பிட்டு மிஞ்சின உச்சிட்டத்தை உண்கிறதே தவிர, நல்ல சாதம் அருந்தி அறியாள். வருஷத்துக்கு ஒரு தரம் தீபாவளியில், அவள் தேகத்தில் எண்ணெய் பட்டிருக்குமோ என்னவோ அதுவும் சந்தேகம். சிட்டுக் குருவியின் தலை மேலே பனங்காயைக் கட்டினது போல, வீட்டு வேலைகளையெல்லாம் அவளே செய்யும்படி அவள் மேல் சுமத்தினார்கள். சிறிய தாயாருக்கும் அவளுடைய மகளுக்கும் வேலை யென்னவென்றால் குணபூஷணியைத் திட்டுகிறதும் அடிக்கிறதும் கொடுமை செய்கிறதேயன்றி வேறொரு வேலையும் இல்லை. அவர்கள் என்ன கொடுமை செய்தாலும் பொறுமையை அநுசரித்து வந்தாள். அவளுடைய தகப்பன் இளைய தாரத்தினுடைய கோளைக் கேட்டுக் கொண்டு மகளுக்கு நடக்கிற அநியாயங்களை விசாரிக்காமல் பாராமுகமாயிருந்து விட்டான். அதனால் அருமைநாத பிள்ளைக்கு எருமைநாதப் பிள்ளை யென்கிற பட்டப் பெயர் கிடைத்தது.