பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மை வெளிப்பட்டது

237

தேவராஜப் பிள்ளை அங்கேயிருந்தவர்களைப் பார்த்து “அந்த ஸ்திரீ அவ்வகையாக ஒப்பாரி சொல்லி அழவேண்டிய காரணம் என்ன?” என்று விசாரித்தார். உடனே அவர்கள் அக்காள் மகளுக்கு அவள் செய்த கொடுமைகளைத் தேவராஜப் பிள்ளைக்கு ரகசியமாகத் தெரிவித்தார்கள். “பையை எடுத்தேனே பழியவற்மேற் போட்டேனே!” என்றதற்குப் பயன் என்னவென்று மறுபடியும் தேவராஜப் பிள்ளை வினவினார். உடனே நாகப்பட்டணத்திலிருந்து வந்த நல்லதம்பி பிள்ளை தேவராஜப் பிள்ளையை நோக்கிச் சொல்லுகிறான்:- “ ஐயா! போன மாசத் துவக்கத்தில் எனக்குப் பெண் விசாரிக்கிறதற்காக என் தாய் முதலான ஸ்திரீகள் இந்த ஊருக்கு வந்தபோது இந்த வீட்டில் இரண்டு பெண்களிருப்பதாகக் கேள்விப்பட்டு அந்தப் பெண்களுடைய குணங்களை அனுபவ சித்தியாக அறியும்பொருட்டு இந்த வீட்டில் சில நாள் தங்கியிருந்தார்கள்; குணபூஷணி யென்ற பெண்ணே அவர்களுடைய கருத்துக்கு இசைந்ததாயிருந்ததால், அந்தப் பெண்ணை எனக்காகக் கேட்கிறதென்று எண்ணங் கொண்டிருக்கையில், அவர்களுடைய பணப் பை அகஸ்மாத்தாய்க் காணாமற் போய்விட்டது. எல்லாருடைய பெட்டிகளையுஞ் சோதித்தபோது குணபூஷணியின் பெட்டியிலிருந்து அந்தப் பணப்பை அகப்பட்டது. அந்தப் பெண் மேலே என் தாயாருக்கு எவ்வளவுஞ் சந்தேகமில்லாதிருந்த போதிலும், அவளுடைய சிறிய தாயாரே அவள் மேலே குற்றஞ் சாட்டினபடியால் என் தாயார் ஆதியிற் கொண்ட கருத்தை மாற்றி, மோகனமாலை என்கிற பெண்ணை எனக்காகக் கேட்டு நிச்சயார்த்தஞ் செய்து வந்தார்கள். இந்தச் சங்கதிகளெல்லாம் என் தாயார் மூலமாக நான் கேள்விப்பட்டேன். இப்போது அந்த ஒப்பாரியின் கருத்தை யோசிக்குமிடத்தில் சிறிய தாயாரே பையைத் திருடிக் குணபூஷணியின் பெட்டியில் வைத்து அவள் மேலே பழி போட்டதாகத் தோன்றுகிறது” என்றான். தேவராஜப் பிள்ளைக்கும், எனக்கும்,