பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

பிரதாப முதலியார் சரித்திரம்

மற்றவர்களுக்கும் அப்படியே அபிப்பிராயம் ஆயிற்று. தேவராஜப் பிள்ளை யாதொரு அக்கிரமத்தைப் பற்றிக் கேள்விப் பட்டால் உடனே அதற்குப் பரிகாரஞ் செய்யவேண்டுமென்ற கவலையுள்ளவரானதால், குணபூஷணிக்கும் நாகப்பட்டணத்திலிருந்து வந்த மாப்பிள்ளைக்கும் விவாகஞ் செய்விக்க வேண்டுமென்கிற இச்சையுடையவரானார். அவருடைய கருத்துக்கு எல்லாரும் இசைந்தபடியால் அவருங்கூட இருந்து அந்தப் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சம்பிரமாகக் கலியாணம் நடப்பித்தார். குணபூஷணி அந்தக் கலியாணத்தில் சந்தோஷமாயிராமல் தன்னுடைய தங்கைக்கு நேரிட்ட அவமானத்தை நினைத்து நினைத்துப் பொருமிக் கொண்டிருந்தாள். இதுவும் அவளுடைய கீர்த்திப் பிரதாபத்தை மென்மேலும் விளங்கச்செய்தது. திருடன் அவகடமாய் வந்து மோகனமாலைக்குத் தாலி கட்டினது செல்லாதென்றும், அவளை வேறு யாருக்காவது பாணிக்கிரகணஞ் செய்து கொடுக்கத் தடையில்லையென்றுஞ் சாஸ்திரந் தெரிந்த பிராமணோத்தமர்கள் வியாக்கியானம் செய்தபோதிலும், அவளுக்குத் திருடன் தாலி கட்டினானென்கிற அபக்யாதி ஊரெங்கும் பிரசித்தமானபடியால், அவளை ஒருவரும் வதுவை செய்யத் துணியவில்லை. குணபூஷணியினுடைய ஓயா முயற்சியினால், நாகப்பட்டணத்தில் மோகனமாலைக்கு ஒரு புருஷன் கிடைத்து, விவாகம் நிறைவேறி, எல்லாரும் க்ஷேமமா யிருக்கிறார்கள்.