பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

பிரதாப முதலியார் சரித்திரம்

பிரயோகித்தேன். அந்தக் குண்டுகளையும் புலி லக்ஷியஞ் செய்யாமல், பாகனைத் தூக்கிக்கொண்டு ஓடிற்று. தன் முதுகின் மேலே வெடிச்சத்தங் கேட்டவுடனே யானை வீறிட்டுக் கொண்டு அந்தப் புலியைத் தொடர்ந்து சென்றது. புலி வெகு தூரம் வரையில் ஓடி, யானை நுழையக்கூடாத ஒரு மலைக்குள்ளாக நுழைந்து விட்டது. ஒரு பர்வதம் மலையருவிகளுடன் நடந்து போவது போல அந்த மத யானை மதஜலங்களை ஒழுக விட்டுக் கொண்டு குறுக்கே இருக்கிற மரங்கள், செடிகளை முறித்துத் தள்ளி, இடி முழக்கம் போல சப்தித்துக் கொண்டு கன வேகத்துடன் கானகத்துக்குள்ளாக நடந்து போவதைப் பார்த்த மற்ற யானைகள், புலி, கரடி முதலியவை அஞ்சி நடுநடுங்கி அங்கும் இங்கும் ஓடிப் பதுங்கிக்கொண்டன. இவ்வகையாக அந்த யானை பல நாள் வரைக்கும் என்னைச் சுமந்துகொண்டு அநேக கான்யாறு மலைகளெல்லாந் தாண்டி, வட திசையை நோக்கி ஓடிற்று. அதை வசப்படுத்தித் திருப்ப நான் செய்த பிரயத்தனங்களெல்லாம் வியர்த்தமாய்ப் போய் விட்டன. நான் புலி வாயில் அகப்பட்ட மான் போலவும், பூனை வாயில் அகப்பட்ட கிளி போலவும், யமன் கையில் அகப்பட்ட உயிர் போலவுந் தத்தளித்துத் தடுமாறித் தயங்கினேன். எனக்காகவுங் கனக சபைக்காகவும் பல பாத்திரங்களில் அநேக வகையான பக்ஷணங்களும், பலகாரங்களும், ஜலமும் அம்பாரிக்குள் வைக்கப் பட்டிருந்தாலும் நான் மனக்கலக்கத்தினால் மூன்று நாள் வரைக்கும் ஆகாரத்தை நினைக்கவேயில்லை. பிறகு நான் அந்தப் பக்ஷணத்தையும் ஜலத்தையும் அருந்தி ஒருவாறு பசி தீர்த்துக் கொண்டேன். பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையானது அந்த ஸ்திதியில் தானும் ஒரு ஆகாரத்தை அபேக்ஷித்தால் எப்படியோ அப்படிப்போல் அந்த மத யானையிடத்தில் அகப்பட்டுக் கொண்டு பரிதபிக்கிற நானும் ஆகாரஞ் செய்தேன்; அந்த யானை ஒரு இடத்திலும் நில்லாமல் அல்லும் பகலுமாக அநேக நாள்