பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வில்லங்கத்தில்‌ மாட்டிக்‌ கொள்ளுதல்‌

241

ஓடின பிறகு, ஒரு மலையருகில் வந்து சேர்ந்தது. அந்த மலைச் சாரலில் எண்ணிறந்த யானைகள் கூட்டங் கூட்டமாய்ச் சஞ்சரித்துக்கொண்டிருந்தன. அந்த யானைகளில் ஒன்றாவது இந்த யானையைப் போலப் பெருங் காத்திரமுள்ளதா யிருக்கவில்லை. மாமிச பர்வதம் போலவும், இடி முழக்கத்துடன் மேகங் கர்ச்சித்துக்கொண்டு வருவது போலவும் இந்த யானை ஓடி வருவதைக் கண்ட மற்ற யானைகள் கர்ப்பங் கலங்கிக் கிடு கிடாய் மானமாய் அங்குமிங்கும் ஓடிப் போய்விட்டன. இந்த யானை எங்கும் நில்லாமல் ஒரே ஒட்டமாய் அந்த மலைச் சார்பை நாடி வந்ததை யோசிக்குமிடத்தில் ஆதியில் இந்த இடம் அந்த யானை வசித்த இடமாயிருக்கலாமென்று தோன்றிற்று. யானை மலையோரத்தில் சென்று தாண்டி தாண்டித் தன் மேலிருந்த அம்பாரியை மலையுடன் சேர்த்து மோதிற்று. உடனே அந்த அம்பாரி சுக்குசுக்காக உடைந்து அதிலிருந்து நான் வெளிப்பட்டு மலைமேலே தொத்திக் கொண்டேன். நான் அம்பாரியிற் கழற்றி வைத்திருந்த என் தலைமுண்டாசு சட்டை முதலியவைகள் அந்த மலையில் எனக்கு எட்டாத இடத்தில் மாட்டிக் கொண்டன. பிறகு அந்த யானை என் கண்ணுக்கு மறைவாய்ப் போய்விட்டதால் அதன் செய்தி யாதொன்றும் எனக்குத் தெரியாது.

யானைகளுடைய பயத்தினால் நான் கீழே இறங்கக் கூடாமலும், மேலே போவதற்கு மார்க்கம் இல்லாமலும் திரிசங்கு சுவர்க்கம் போலே நான் அந்தரத்தில் அகப்பட்டுக்கொண்டேன். அந்த மலை செங்குத்தாயிராமல், சாய்வாகவும் கரடு முரடாகவும் இருந்தபடியால், நான் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏற ஆரம்பித்தேன். நான் போகிற வழியிலுள்ள மரங்களில் என் பெயரை ஒரு ஆணியினால் வரைந்துகொண்டு போனேன். நான் மலை விருக்ஷங்களின் கனிகளை யுண்டு, பசி தீர்த்துக் கொண்டு, மலை மேல் ஏற இரண்டு நாட்கள் சென்றன.

16