பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

பிரதாப முதலியார் சரித்திரம்

நாங்கள் போகும்போது ஒற்றைக்கண் குருடன் ஒருவன் எங்களுக்கு எதிரே வந்தான். அவன் என்னைக் கண்டவுடனே ஓடி வந்து “அடா! திருடா! நீ போன வருஷத்தில் திருநாளுக்குப் போவதற்காக உன்னுடைய குருட்டுக் கண்ணை எனக்குக் கொடுத்துவிட்டு என்னுடைய நல்ல கண்ணை இரவல் வாங்கிக்கொண்டு போனாயே! கெடுத் தப்பி இத்தனை நாளாகியும் ஏன் என் கண்ணைக் கொடுக்கவில்லை?” என்று அவன் ஒரு பக்கத்தில் என்னைப் பிடித்துக் கொண்டான்.

பிறகு ஒற்றைக் கால் நொண்டியான ஒருவன் வந்து என்னைப் பார்த்து “என்னுடைய நல்ல காலை இரவல் வாங்கிக்கொண்டு நொண்டிக்காலைக் கொடுத்துவிட்டுப் போன நீ இந்நாள் வரையில் அகப்படாமல் மறைந்திருந்தாயே! நியாய சபைக்கு வா” என்று அவனும் என் கையைப் பற்றிக்கொண்டான்.

நாங்கள் போகிற மார்க்கத்தில் தேசாந்திரிகளுக்குச் சமையல் செய்து விற்கிற பாகசாலை ஒன்று இருந்தது. சமையல் செய்கிற இடத்திலிருந்து கம கமவென்று பரிமள வாசனை வந்தபடியால், நான் சற்றுநேரம் சன்னலுக்கு நேரே நின்று அந்த வாசனையை மூக்கினால் இழுத்தேன். உடனே பாகசாலைக்காரன் ஓடி வந்து என்னைப் பார்த்து “பாகஞ் செய்யப்பட்ட பதார்த்தங்களின் வாசனையை நீ மூக்கினால் கிரகித்துச் சாப்பிட்டபடியால், அந்தப் பதார்த்தங்களுக்கு நீ விலை கொடுக்கவேண்டும்” என்று அவனும் பிடித்துக்கொண்டான்.

நான் மறுபடியும் செல்லும்பொழுது என்னுடைய நிழல் வழியில் நின்றுகொண்டிருந்த ஒரு தாசியின் மேலே பட்ட உடனே, அவள் ஓடிவந்து “நீ என்னை ஆலிங்கனம் செய்தபடியால் அந்த ஆலிங்கனத்துக்காக ஆயிரம் வராகன் கொடுக்கவேண்டும்” அவளும் என்னைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக்கொண்டாள்.