பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்ள வழக்குகள்‌

243

படுத்துவதாக ஒப்புக்கொண்ட நீ அப்படிச் செய்யத் தவறிப்போய் விட்டதால் உன்னை நான் சும்மா விடுவேனா? என்னுடைய ஜோட்டை நீ காலில் மாட்டிப் பார்த்தபிறகு அவைகளை நீ கொடுத்தால் நான் வாங்குவேனா? நியாய சபைக்குப் போவோம் வா?” என்று என்னைப் பற்றி இழுத்துக்கொண்டு போனான். அவன் கையைத் திமிறிக்கொண்டு நான் தப்பித்துக் கொள்வது எளிதாயிருந்தாலும் “தன்னூருக்கு யானை அயலூருக்குப் பூனை” என்பது போல் நான் என்னுடைய ஸ்வரூபத்தைக் காட்டாமல் அடக்கிக்கொண்டு போனேன்.

போகும்போது சக்கிலியனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு நிழலுக்காகச் சற்று நேரம் ஒரு திண்ணையில் உட்கார்ந்தேன். அந்தத் திண்ணையிலே சிலர் சூது விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து “பந்தயம் என்ன?” என்று கேட்டேன். அவர்கள் “சும்மா” என்றார்கள். நான் பந்தயமில்லையென்று நினைத்து அவர்களுடன் கூடி ஒரு ஆட்டம் ஆடித் தோற்றுப்போனேன். சக்கிலியன் எனக்கு உத்தரவு கொடுத்த நேரங் கடந்துபோய் விட்டதால் நான் அவனுடன் போவதற்காகத் திண்ணையை விட்டு எழுந்தேன். உடனே அந்தச் சூதாடிகள் “சும்மாவைக் கொடு” என்று என் மடியைப் பிடித்துக்கொண்டார்கள். நான் ஒன்றும் தோன்றாமல் மேலுங் கீழுமாக விழித்தேன். அவர்கள் என்னைப் பார்த்து “நீ பந்தயம் என்னவென்று எங்களைக் கேட்டபோது நாங்கள் சும்மா என்றோம். அதற்கு நீ சம்மதித்துத் தானே எங்களுடன் விளையாடினாய். நீ தோற்றுப் போனதால் நீ ஒப்புக்கொண்டபடி சும்மாவைக் கொடுக்க வேண்டும்” என்றார்கள். நான் “சும்மாவென்பது யாது?” என்றேன். உடனே “நியாய சபைக்கு வா” என்று அவர்கள் ஒரு பக்கத்தில் என்னைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்தார்கள்.