பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

பிரதாப முதலியார் சரித்திரம்

தார்கள். அந்தக் காவல் சேவகர்கள் என்னைப் பார்த்து “அந்த நகைகள் உனக்குச் சொந்தமல்லவென்று அவர்கள் சொல்லுகிறார்கள். அவர்களுக்குச் சொந்தமல்லவென்று நீ சொல்லுகிறாய். ஆகையால் நீங்கள் இரு தரத்தாரும் அந்த நகைகளுக்குச் சுதந்தரவாளிகள் அல்லவென்பதற்கு உங்களுடைய வாய்ப்பிறப்பே போதுமானதாயிருக்கிறது. நாதன் இல்லாச் சொத்துக்கு நாங்கள் பாத்தியஸ்தர்களானதால், அந்த நகைகள் எங்களுக்குத்தான் சொந்தம்” என்று சொல்லி நகைகளைப் பறித்துக்கொண்டார்கள். பிறகு அந்தச் சக்கிலியன் முதலிய துர்வழக்காளிகள் என் மேலே குற்றஞ்சாட்டி என்னைக் காவலில் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். அந்தப் பிரகாரம் சேவகர்கள் என்னைப் பிடித்துக் கை விலங்கு கால் விலங்கு மாட்டி திரௌபதியைத் துகிலுரித்தது போல் என்னுடைய வஸ்திரங்களையும் பிடுங்கிக்கொண்டு கௌபீனத்துடன் என்னைக் காவலில் வைத்துக்கொண்டார்கள். வேலியே பயிரை மேய்ந்தது போல அந்தக் காவல் சேவகருடைய செய்கையே அப்படியிருக்குமானால் என்னைப் பிடித்துக்கொண்டு வந்த சக்கிலியன் முதலானவர்கள் மேல் குறை சொல்ல எனக்கு வாயுமுண்டா?




35-ஆம் அதிகாரம்
காவற் சேவகர்களின் குமார்கம்—விக்ரம
புரியின் விருத்தாந்தம்—குடியர சொன்னுங்
கொடிய அரசு

தாடி பற்றி எரியும்போது சுருட்டுக்கு நெருப்பு கேட்டது போல், அந்தக் காவல் வீரர்கள் என்னைப்