பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவற்‌ சேவகர்‌ கொடுமை

247

பார்த்துச் சொல்லுகிறார்கள்:- “இந்த ஊரிலே சில ஆஸ்திவந்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு ஒன்றும் கொடுக்கிறதுமில்லை; குற்றஞ் செய்கிறதுமில்லை. அவர்கள் உன்னிடத்திலே திருடினதுபோற் குற்றஞ் சாட்டிச் சில தடையங்களை அவர்களுடைய வீட்டிற் போட்டு எடுத்து அவர்களை விசாரணைக்குக் கொண்டுவர யோசித்திருக்கிறோம். நீ அந்தத் திருட்டுக் குற்றம் வாஸ்தவந்தானென்று சாக்ஷி சொன்னால், எங்களுக்குக் கிடைக்கிற தொகையில் உனக்கு நாங்கள் பங்கு கொடுக்கிறதுமல்லாமல் உன் மேலே இப்போது வந்திருக்கிற குற்றங்களையும் நிவர்த்தி செய்துவிடுகிறோம்” என்கிறார்கள். அவர்கள் சொன்ன ஆசை வார்த்தைகள் எப்படிப்பட்டவர்களுடைய புத்தியையும் மயக்கக் கூடியவைகளா யிருந்தாலும், என்னுடைய தாய் தகப்பன்மார்கள் எனக்குச் செய்த பால போதத்தினால் நான் துர்ப்புத்திக்கு இடங் கொடாமல், அந்தக் காவற் சேவகர்களை நோக்கி “நீங்கள் சொல்லுகிறபடி பொய்ச்சாக்ஷி சொல்ல நான் அருகனல்ல. நான் ஒரு குற்றமுஞ் செய்யாமலிருக்கும்போதே கடவுள் என்னை இந்த நிலைமையில் விட்டிருக்கிறார். நான் பொய்ச்சாக்ஷி சொல்லவும் வேண்டுமா?” என்றேன். அவர்கள் மறுபடியும் என்னை நோக்கி “நீ பொய்ச்சாக்ஷி சொல்ல அஞ்சுகிறபடியால் வேறொரு காரியஞ் சொல்லுகிறோம். அதையாவது நீ செய்யவேண்டும். எங்களுக்கு வெகு காலமாக உத்தியோகம் உயரவில்லை; ஏனென்றால் நாங்கள் மானத்தைப் பார்க்கிலும் பிராணனைப் பெரியதாக எண்ணுகிற சூரர்களானபடியால் ஒரு வீட்டில் திருடர்கள் பிரவேசித்துத் திருடும்போதாவது, அல்லது வேறு குற்றங்கள் நடக்கும்போதாவது நாங்கள் போய்க் கலந்து கொள்ளுகிறதில்லை. திருடர்கள் சொத்துக்களையெல்லாம் வாரிக்கொண்டு ஓடின பிற்பாடு, நாங்கள் திருட்டு நடந்த இடத்துக்குப் போய் விசாரிக்கிறது வழக்கம். நாங்கள் குற்றம் நடக்கும்போது பிரவேசித்துத் தடுக்காமலும், திருடர்களைக் கையுங் களவுமாய்ப் பிடிக்-