பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

பிரதாப முதலியார் சரித்திரம்

காமலிருப்பதால், எங்களை உத்தியோகத்தில் உயர்த்தமாட்டோமென்று மேலான அதிகாரிகள் சொல்லுகிறார்கள். ஆகையால் நாங்களே சில திருடர்களைச் சேர்த்து ஒரு வீட்டில் திருடும்படி செய்து அவர்களைக் கையும் மெய்யுமாய்ப் பிடித்ததுபோற் பாவனை செய்ய யோசித்திருக்கிறோம். அவர்களைக் காட்டிக் கொடுக்கிறதில்லை யென்று நாங்கள் வாக்குறுதி செய்தால் அவர்கள் எங்களுடைய வார்த்தையை நம்பி அகத்தியந் திருடச் சம்மதிப்பார்கள். அவர்கள் திருடின பிற்பாடு அவர்களைக் காட்டிக் கொடுத்தால் தோஷம் என்ன? அவர்கள் திருடுகிற சொத்தை நாங்கள் கைப்பற்றிக் கொள்வதுமன்றி எங்களுக்கு உத்தியோகம் உயரவும் ஹேதுவாயிருப்பதால் இரண்டு விதமான அனுகூலங்கள் இருக்கின்றன. சில திருடர்கள் தங்களுடைய கிருகங்களைப் பார்க்கிலும் காராக்கிருகத்தைச் சிரேஷ்டமாக எண்ணி அவ்விடத்துக்கு எப்போது போவோமோ என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருடர்களை ஒரு வீட்டில் திருடும்படி ஏவிப் பிறகு அவர்களைக் காட்டிக்கொடுப்பதினால் அவர்களுக்கு நாங்கள் உபகாரஞ் செய்கிறோமே யன்றித் தீங்கு செய்யவில்லை. நீயும் அந்தத் திருடர்களுடன் சேர்ந்து திருடினால், உன்னை மட்டும் நாங்கள் ஒரு நாளுங் காட்டிக் கொடோம். உன்னைத் தகப்பனாக வைத்துக் கொண்டு நாங்கள் நினைத்த காரியத்தை முடிக்கிறோம்” என்றார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட உடனே நான் இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டு, இப்படிப்பட்ட அயோக்கியர்களுடன் சகவாசஞ் செய்யும்படி லபித்ததே யென்று நினத்து நினத்து நெடு நேரம் பெருமூச்செறிந்தேன். அந்த ஊர் தவிர வேறெந்த ஊரிலாவது அப்படிப்பட்ட வார்த்தைகளை யாராவது சொல்லியிருந்தால் அவர்களுடைய நாவு உடனே அறுபட்டிருக்கும். அவர்களுடைய முப்பத்திரண்டு பல்லும் உடைபட்டிருக்கும். ஆயிரம் பாம்புகளுக்குள் ஒரு தேரையைப் போல அகப்பட்டுக்-