பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவற்‌ சேவகர்‌ கொடுமை

249

கொண்டு தவிக்கிற நான் என்ன செய்யக் கூடும்? நான் அவர்களைப் பார்த்து “நீங்கள் சொல்லுகிற காரியத்தை நிறைவேற்ற நான் சமர்த்தன் அல்ல. அதற்குத் தகுந்த பக்குவசாலிகள் உங்களுக்கு யதேஷ்டமாக அகப்படுவார்கள். ஆகையால் என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றேன். இதனைக் கேட்டவுடனே அந்தப் பாபிஷ்டர்கள் கோபிஷ்டர்களாகி என்மேலே ஏற்பட்டிருக்கிற குற்றங்களை பலப்படுத்தவும், அந்தக் குற்றங்களை அவர்கள் முன்பாக நான் ஒப்புக்கொண்டது போலப் படுமுடிச்சு முடியவும் ஆரம்பித்தார்கள். அவர்கள் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்ப்பது யாருக்கும் அசாத்தியமாகையால், நான் வலையில் அகப்பட்ட மான் போலவும், தூண்டிலில் அகப்பட்ட மீன் போலவும் துடித்துப் பதைத்துத் தடுமாறினேன்.

என்னோடு கூடக் காவற்கூடத்தில் இருந்தவர்களில் ஒருவன் சுமுகனாயும் சரசியாயுங் காணப்பட்ட படியால், நான் அவனைப் பிரத்தியேகமாக அழைத்து இந்த ஊர்ப் பெயரும் அரசன் பெயரும் என்னவென்றும், ராஜரீக தர்மமும் நியாய பரிபாலனமும் எப்படியென்று விசாரித்தேன். அவன் என்னைப் பார்த்து, “நீர் அன்னிய தேசஸ்தர் போற் காணப்படுகின்றது. இந்த ஊருக்கு விக்கிரமபுரி என்று பெயர். பல நாடுகளுக்கு இது ராஜ நகரமாயிருக்கின்றது. இதை ஆண்ட அரசன் இதற்கு இரண்டு வருஷத்துக்கு முன்பு புருஷப் பிரஜையில்லாமல் இறந்துபோனான். அதுமுதற் இந்த ஊர் அரசனில்லாமல் பிராஜாதிபத்தியமா யிருக்கிறது. ஒவ்வொருவனும் தான் தான் பெரியவனென்று தலைக்குத் தலை மூப்பாய்த் தறிதலையாய்த் திரிகிறபடியால் இந்த நாடு தலையில்லாத சரீரம் போலத் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. சூரியன் போனபிற்பாடு துஷ்ட மிருகங்கள் வெளிப்பட்டுச் சஞ்சரிப்பதுபோல, அரசன் போனபிற்பாடு அக்கிரமக்காரர்கள் கிளம்பி ஊரைப் பாழாக்கிவிட்டார்கள். சாதுக்கள் எல்லாரும் ஒடுங்கிப் போனார்கள்.