பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

பிரதாப முதலியார் சரித்திரம்

வெளியே போனால் மறுபடியும் வீட்டுக்குத் திரும்பி வருவோமென்கிற நம்பிக்கையில்ல. நம்முடைய பொருளை நாமே சுதந்திரமாக அநுபவிப்போமென்கிற நிச்சயமில்லை. “பாழூருக்கு நரி ராஜா”என்பது பால துஷ்டர்களே சர்வ வியாகபகமாயிருக்கிறபடியால் லக்ஷாதிபதியா யிருக்கிறவன் ஒரு நிமிஷத்தில் பிக்ஷாதிபதியாகிறான். பிக்ஷாதிபதியா யிருக்கிறவன் லக்ஷாதிபதியாகிறான். இந்த ஊருக்கு விக்கிரமபுரி யென்கிற பெயர் போய் அக்கிரமபுரி யென்கிற பெயர் வந்துவிட்டது. பெரிய அரண் போல மலைகளும் சமுத்திரங்களும் சூழ்ந்திருப்பதால் இந்த ஊருக்கு வெளிச் சத்துருக்கள் ஒருவரும் இல்லை. உள் சத்துருக்களுடைய போராட்டமே பெரிதாயிருக்கின்றது. குடியரசு, கொடிய அரசாகிவிட்டதால் சீக்கிரத்தில் ஒரு அரசனை நியமிக்க வேண்டுமென்பது சாதுக்களுடைய மனோபாவமாயிருக்கின்றது. அப்படிப்பட்ட நல்ல காலம் எப்போது வருமோ தெரியவில்லை” என்றான்.

நான் அந்த மனுஷனைப் பார்த்து “இப்போது அரசனில்லாத படியால் நம்முடைய சங்கதிகளை யார் விசாரிப்பார்கள்?” என்று கேட்டேன். அவன் என்னைப் பார்த்துச் சொல்லுகிறான்:- “அரசனால் நியமிக்கப்பட்ட ஒரு நியாயாதிபதி யிருக்கிறான். அவன் தான் நம்முடைய சங்கதிகளை விசாரிப்பான். அவன் அரசன் உள்ளவரையில் உருத்திராக்ஷப் பூனை வேஷம் போட்டுக்கொண்டு வந்தான். அரசன் இறந்த பிறகு அவனுடைய யதார்த்த சொரூபத்தைக் காட்டி விட்டான். யமனுக்கு தர்மராஜா என்கிற பெயர் வாய்த்தது போல், இவனுக்கு நியாயாதிபதி என்கிற பெயர் கிடைத்திருக்கின்றது. அவன் சிஷ்ட நிக்கிரகமும் துஷ்டாநுக்கிரகமுஞ் செய்கிறதேயன்றி, அவன் துஷ்டநிக்கிரகமும் சிஷ்டாநுக்கிரகமும் செய்கிறதில்லை. ஒரு மாசத்தில் ஒரு தரம் அல்லது இரண்டு தரந்தான் நியாய சபைக்கு வருகிற வழக்கம்.