பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

பிரதாப முதலியார் சரித்திரம்

விடமாட்டார்களென்கிற பயத்தினாலும், நான் அரசனாயிருக்கிற பக்ஷத்தில் நீங்கள் இருக்கிற இடத்தை அநாயாசமாய்க் கண்டுபிடிக்கலாமென்கிற நம்பிக்கையாலும் நான் ராஜாங்கம் வேண்டாமென்று சொல்லாமல் சும்மாயிருந்து விட்டேன். உடனே அவர்கள் பட்டணப் பிரதக்ஷணஞ் செய்வித்து அரண்மனைக்குக் கொண்டுபோய் மகுடஞ் சூட்டினார்கள். அப்போது ஒரு பக்கத்தில் பரத நாட்டியமும், ஒரு பக்கத்தில் மேள வாத்திய முழக்கமும், ஒரு பக்கத்தில் சங்கீத கானமும், ஒரு பக்கத்தில் பிராமணருடைய வேதகோஷமும், ஒரு பக்கத்தில் வித்வான்களுடைய ஸ்தோத்திரப் பாடல்களும், ஒரு பக்கத்தில் ஆசியக்காரர்களுடைய விகடமுங் கூடி எனக்குத் தலை மூர்ச்சனையாய்ப் போய்விட்டது. அந்த ஆரவாரங்களெல்லாம் போதுமென்றும் நான் ஏகாந்தமாயிருக்க அபேக்ஷிக்கிறேனென்றும் நான் ஆயிரந்தரம் தெரிவித்தபிறகு அவர்கள் ஒருவர் ஒருவராய்த் தொலைந்தார்கள். அவர்கள் தொலைந்ததும் ஆயிரம் பேர் என்னைச் சுற்றிக்கொண்டு பங்கா போடுகிறவர்களும், கவரி வீசுகிறவர்களும், குடை பிடிக்கிறவர்களும், படிக்கம் ஏந்துகிறவர்களும், அடப்பம் ஏந்துகிறவர்களும், பன்னீர் தெளிப்பவர்களும், கந்தப்பொடி இறைப்பவர்களும், பூமழை பொழிகிறவர்களூம், “சுவாமி! பராக்கு! பராக்கு!” என்று கட்டியங் கூறுகிறவர்களும், வாழத்துகிறவர்களும், இன்னும் அநேகவித கோலாகலஞ் செய்கிறவர்களுமாயிருந்தார்கள். அவர்கள் எந்தச் சமயத்திலும் என்னுடன் கூட இருக்கிறார்களென்று கேள்விப்பட்டு எனக்கு மகத்தாகிய சித்தாகுலம் உண்டாயிற்று.

நான் அரண்மனைக்குச் சேர்ந்த சிங்கார வனத்துக்காவது போய்ச் சற்று நேரம் ஏகாந்தமாயும் அமரிக்கையாகவும் இருக்கலாமென்று நினைத்துப் புறப்பட்டேன். நான் பகிர் பூமிக்குப் போவதாக நினைத்து, என்னை நூறு பேர் தொடர்ந்து வந்தார்கள். ““ஏன் வருகிறீர்கள்?””