பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாள்‌ தேடிவந்த வரலாறு

267

நிச்சயித்துக் கொண்டேன். ஆனால் பெண் வடிவாய்ப் போகிறது எப்போதும் ஆபத்தை விளைவிக்குமானதால் புருஷ வேஷந் தரித்துக்கொண்டு போவது சர்வோத்தமமென்று நினைத்து அப்போது நான் இடையிலே தரித்திருந்த வெள்ளைச் சல்லாச் சேலையை இரண்டாகக் கிழித்து இடுப்பு வேஷ்டியாகவும் அங்கவஸ்திரமாகவும் உபயோகித்துக் கொண்டு உங்களுடைய சட்டையை மேலே தரித்துக்கொண்டு உங்களுடைய முண்டாசையும் என் தலை மேலே தரித்துக்கொண்டேன். இப்படியாக ஆண்வேஷந் தரித்துக்கொண்டு படிவழி இறங்கி அடிவாரத்தில் வந்து சேர்ந்தேன்.

நான் வந்து சேர்ந்தபோது பட்டணத்து ஜனங்களெல்லோரும் மலையடிவாரத்தில் ஏகமாய்க் கூட்டங்கூடியிருந்தார்கள். அவர்களால் விடப்பட்ட ஒரு யானையானது என்னிடத்தில் வந்து என் கழுத்திலே பூமாலையைப் போட்டு என்னைத் தூக்கித் தன் முதுகின் மேலே வைத்துக்கொண்டது. உடனே ஜனங்களெல்லோரும் என்னை நோக்கி “மகாராஜாவே! சக்கரவர்த்தியே! நீங்கள் தீர்க்காயுசாயிருக்க வேண்டும். நாங்கள் ஒரு ராஜாவை நியமிக்க வேண்டியதற்காக யானையின் கையில் பூமாலையைக் கொடுத்து அனுப்பினோம். அது உங்களுடைய கழுத்திலே மாலையைப் போட்டபடியால், இனி மேல் நீங்கள் தான் எங்களுக்கு மகாராஜா. நாங்கள் உங்களுக்குப் பிரஜைகள். நீங்கள் எங்களுக்குப் பிதா. நாங்கள் உங்களுக்குப் பிள்ளைகள்” என்று சொல்லி பூமியில் சாஷ்டாங்கமாக விழுந்து என்னை நமஸ்கரித்தார்கள். கூத்துப் பார்க்கப் போன இடத்திலே பேய் பிடித்தது போலப் புருஷனைத் தேடிவந்த இடத்தில் இப்படிப்பட்ட சகடயோகம் வந்ததேயென்று நான் திகைத்து ராஜாங்கம் வேண்டாமென்று நிராகரிக்க எண்ணங் கொண்டேன். ஆனால், நான் வேண்டா மென்றாலும் ஜனக்கள் என்னை