பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

பிரதாப முதலியார் சரித்திரம்

படியால் நீங்களிருக்கிற இடத்திலே என்னைக் கொண்டுபோய் விட்டாலும் விடுமென்று நான் மனத்திடஞ் செய்துகொண்டேன். அப்போது அர்த்த சாமமாகவும் எல்லாருந் தூங்குகிற சமயமாகவும் இருந்தபடியால் யானை என்னைத் தூக்கிக் கொண்டு போனது ஒருவருக்குந் தெரியாது.

அந்த யானையானது உள்நகர் புறநகரெல்லாங் கடந்து கானகத்துக்குள் நுழைந்து மரஞ் செடிகளையெல்லாம் நெறு நெறென்று சாய்த்துத் தள்ளிக்கொண்டு அநேகங் காடுகள், மலைகள், ஆறுகளெல்லாந் தாண்டி வட திசையை நோக்கி இரவும் பகலுமாகக் கடுமையாக நடந்தது. நான் வழியிலிருகிற மரக் கனிகளை உண்டு பசி தீர்த்துக் கொண்டு போனேன். யானை பல நாள் நடந்தபிறகு ஒரு பெரிய மலையடிவாரத்தில் வந்து சேர்ந்து அந்த மலையோரத்தில் அசையாமல் நின்றது. நான் அந்த மலையில் ஒரு பக்கத்தில் அம்பாரி உடைந்து கிடப்பதைக் கண்டு யானையை விட்டுத் தாண்டி, அந்த மலை மேலே தொற்றிக் கொண்டேன். அந்த அம்பாரி கிடந்த இடத்துக்குக் கொஞ்ச தூரத்தில் சில வஸ்திரங்கள் கிடந்தன. அவைகளை ஒரு நீளக் கழியினால் இழுத்து என் கையிலே எடுத்துப் பார்க்க அவைகள் உங்களுடைய சட்டையாகவும் முண்டாசாகவுமிருந்தபடியால் எனக்கு உண்டான மனோ விசாரம் இவ்வளவென்று சொல்ல ஒண்ணாது. அவைகளைக் கண்களில் ஒத்தித் தலையிலே சூடி, வாயிலே வைத்து அநேக முத்தங்கள் கொடுத்தேன். அவைகளைக் கையில் எடுத்துக்கொண்டு மலைமேல் ஏறும்பொழுது உங்களுடைய பெயர் எழுதப்பட்டிருந்த மரங்களையும் பார்வையிட்டேன். அந்த மரங்களையே வழிகாட்டியாக வைத்துக்கொண்டு நடந்து மலையின் உச்சியில் வந்து சேர்ந்தேன். அந்த மலைக்கு வடபுறத்தில் வெட்டப்படிருந்த படிகளைக் கண்ட உடனே அவைகளின் வழியாக நீங்கள் இறங்கிப் போயிருக்கலாமென்று