பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாள்‌ தேடிவந்த வரலாறு

265

போது அதிக தூரத்தில் ஒரு கரிய மேகம் நடந்து வருவதுபோல ஒரு யானையானது பாகனுமில்லாமல் அம்பாரி முதலிய அலங்காரமுமில்லாமல் வெறுமையாய் நடந்து வந்தது. அந்த யானை சமீபத்தில் வந்த உடனே நிலா வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தேன். அதுதான் உங்களை மோசஞ் செய்த பட்டத்து யானையென்று எனக்குப் பரிஷ்காரமாய் விளங்கிற்று. அந்த யானையானது வழக்கமாய்க் கட்டப்படுகிற கொட்டத்துக்குள்ளே வந்து தானே நுழைந்து கொண்டது. அப்போது எல்லாரும் அருநித்திரையாயிருந்தபடியால் அந்த யானை வந்தது என்னைத் தவிர வேறொருவருக்குந் தெரியாது. அந்த யானையைப் பார்த்த உடனே எனக்குச் சகிக்கக்கூடாத சஞ்சலம் உண்டாகி நான் ஒருவருக்குந் தெரியாமல் எழுந்து அந்த யானை நின்ற இடத்துக்குப் போனேன். அந்த யானை என்னைப் பார்த்த உடனே அதனுடைய துதிக்கையை என்மேலே நீட்டி மிருதுவாகத் தடவிற்று. நான் உடனே அந்த யானையைப் பார்த்து “ஐயோ! துஷ்ட மிருகமே! என்னுடைய பர்த்தாவை என்ன செய்தாய்? எந்தத் திக்கிலே கொண்டுபோய் விட்டாய்? அவரைக் கொன்றுவிட்டாயோ? அல்லது உயிரோடு விட்டாயோ? ஒன்றுந் தெரியவில்லயே!! நீ ஆணோடு பெண்ணோடு பிறக்கவில்லையா? நீ ஆணோடு பிறந்திருந்தால் என் பர்த்தாவை ஏன் அவகடஞ் செய்தாய்? நீ பெண்ணோடு பிறந்திருந்தால் பெண்ணாகிய எனக்கு நீ இரங்கமாட்டாயா? என் பர்த்தா இருக்குமிடத்தைக் காட்டாயா? என் துன்பத்தை ஓட்டாயா?” என்று பல விதமாகச் சொல்லிப் புலம்பினேன். என்னுடய கண்ணீர்த் துளிகள் அந்த யானையின் துதிக்கையை நனைத்து விட்டன. உடனே அந்த யானையானது தன்னுடைய துதிக்கையை என்னுடைய இடுப்பிலே சுற்றி என்னை அதி மிருதுவாகத் தூக்கித் தன் முதுகின் மேலே வைத்துக்கொண்டு நடந்தது. ஆரம்பத்தில் எனக்குப் பயம் ஜனித்த போதிலும் அந்த யானை வட திசையை நோக்கி நடந்த-